இந்தியாவின் ஆற்றல் உலகம் முழுவதையும் வசீகரிக்கிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் இன்று (02.03.2025) ‘ஜனநாயகம், மக்கள்தொகை, வளர்ச்சி, இந்தியாவின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் நான்காவது பி.பரமேஸ்வரன் நினைவு சொற்பொழிவில் திரு ஜக்தீப் தன்கர் உரையாற்றினார்.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை அவர் எடுத்துரைத்தார். மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகளும் வெளிப்படையான நிர்வாகமும் நாட்டுக்கு உத்வேகத்தை அளித்துள்ளன என்று அவர் கூறினார். 140 கோடி மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை, மின்சார இணைப்பு, தண்ணீர் இணைப்பு, எரிவாயு இணைப்பு, இணைய இணைப்பு, அனைத்து பகுதிகளிலும் சாலை, ரயில் இணைப்பு, சுகாதாரம், கல்வித் துறையில் வளர்ச்சி ஆகியவை நமது வளர்ச்சிப் பாதையை வலுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இனம், மதம், சாதி, நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், கடைசி வரிசையில் இருப்பவர்களுக்கும் பலன்கள் சென்றடைய வேண்டும் என்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். இந்திய விழுமியங்கள், இந்திய நெறிமுறைகள் ஆகியவை தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன என அவர் குறிப்பிட்டார்.
இந்த சொற்பொழிவு பாரதத்தின் மிகச்சிறந்த ஒருவரின் நினைவாக அமைந்துள்ளது எனவும் இந்த நூற்றாண்டில் இந்து சிந்தனைப் போக்கின் லட்சியவாதிகள், சிந்தனையாளர்களில் முன்னணியில் பரமேஸ்வரன் உள்ளார் எனவும் திரு ஜக்தீப் தன்கர் கூறினார்.
மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்றம் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். அது உரையாடல், விவாதங்களின் அசைக்க முடியாத கோட்டையாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இளம் மனங்களும், மூத்த குடிமக்களும் ஒன்றிணைந்து, சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக மாற வேண்டும்” என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறினார்.
குடியரசுத் துணைத் தலைவரின் துணைவியார் திருமதி சுதேஷ் தன்கர், கேரள ஆளுநர் திரு ஆர்.வி. அர்லேகர், முன்னாள் மத்திய இணையமைச்சர் திரு வி. முரளீதரன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திவாஹர்