வளர்ச்சியையும் உள்ளடக்கிய தன்மையையும் ஊக்குவித்தல்- பொருளாதாரத்தில் அரசு மின் சந்தையின் சிறந்த தாக்கம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பொது கொள்முதல் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மக்களின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பொருட்கள், சேவைகளை திறமையாகவும் வெளிப்படையாகவும் அரசு வாங்கும்போது, அது பொது நிதிகளை திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், அனைத்து அளவிலான வணிகங்களுக்கும் பொருளாதார வாய்ப்புகளைத் தூண்டுகிறது. இது, வேலைவாய்ப்பையும் புதுமையையும் ஊக்குவிக்கிறது. அத்துடன் ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. இந்தியாவில், அரசு மின் சந்தை (GeM-ஜெம்), பொது கொள்முதலில் ஒரு சிறந்த நடைமுறையாக உருவெடுத்துள்ளது. இது அரசுக்கு மட்டுமல்லாமல், உள்ளூர் தொழில்முனைவோர், புத்தொழில்கள், சிறு வணிகங்களுக்கும் பயனளிக்கும் திறந்த, உள்ளடக்கிய தளத்தை உருவாக்குகிறது.

நாட்டின் சமூக வளர்ச்சிக்கு ஏற்ப, அரசு மின் சந்தை, புத்தொழில் நிறுவனங்கள் ரூ. 35,950 கோடி மதிப்புள்ள ஆணைகளை நிறைவேற்ற உதவியுள்ளது. அரசு மின் சந்தையின் மொத்த விற்பனையில் பெண் தொழில்முனைவோர் 8% உள்ளனர். மொத்தம் 1,77,786 உத்யம் -சரிபார்க்கப்பட்ட பெண்களால் நடத்தப்படும் குறு, சிறு நிறுவனங்கள் (MSE) ஜிஇஎம் தளத்தில் பதிவு செய்துள்ளன. இதன் ஒட்டுமொத்த ஆர்டர் மதிப்பு ரூ. 46,615 கோடியைத் தாண்டியுள்ளது.

அரசு மின் சந்தை (GeM) என்பது இந்தியாவில் பொது கொள்முதலுக்கான ஒரு இணைய தளமாகும். இது பிரதமர் திரு நரேந்திர மோடியால் திட்டமிடப்பட்டது. அரசுத் துறை கொள்முதலுக்கு திறந்த, வெளிப்படையான கொள்முதல் தளத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி 2016 ஆகஸ்ட் 09 அன்று வர்த்தக தொழில்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.

அரசு மின் சந்தையின் அடிப்படைக் கோட்பாடுகள் வெளிப்படைத்தன்மை, நேர்மை, உள்ளடக்கிய தன்மை ஆகியவையாகும்.

அரசு மின்னணு சந்தையின் முக்கிய அம்சங்கள், எளிதாக வர்த்தகம் செய்வதை ஊக்குவித்தல் வருடாந்திர பொது கொள்முதலுக்கு நேரடி சந்தை இணைப்புகளை ஏற்படுத்துவது, பெண் தொழில் முனைவோரை மேம்படுத்துதல் போன்றவையாகும்.

அரசு மின் சந்தை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) பல்வேறு தரப்பினருடன் இணைந்து செயல்படுகிறது. குறிப்பாக எஸ்சி, எஸ்டி (SC/ST) பிரிவு தொழில் முனைவோர் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களிடமிருந்து 25 சதவீத கட்டாய கொள்முதல் இலக்கையும், எஸ்சி/எஸ்டி பிரிவினரின் எம்எஸ்எம்இ நிறுவனங்களிடமிருந்து 4 சதவீத பொருட்கள், சேவைகளையும் அனைத்து அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் (பி.எஸ்.இ) கொள்முதல் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த செயல்பாடு  அமைந்துள்ளது. பொதுக் கொள்முதலில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையின் தீவிர பங்களிப்பை ஊக்குவிக்க இந்த நடைமுறை முயல்கிறது.

சமீபத்திய புள்ளிவிவரங்கள் சந்தையில் குறிப்பிடத்தக்க செயல்பாட்டை வெளிப்படுத்துகின்றன. இது 162,985 முதன்மை வாங்குபவர்கள், 228,754 இரண்டாம் நிலை வாங்குபவர்கள், 11,006 தயாரிப்பு வகைகள், 332 சேவை வகைகளுடன் ஒரு வலுவான சூழல் அமைப்பைக் காட்டுகிறது. கடந்த நிதியாண்டில், ஆணை அளவு 62,86,543-ஐ எட்டியது. கொள்முதல் ஆணை மதிப்பு ரூ. 4,03,305 கோடி.

நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே ரூ. 4,52,594 கோடி மதிப்புள்ள 61,23,691 கொள்முதல் ஆணைகள் பெறப்பட்டுள்ளன. குறிப்பாக, மொத்த  மதிப்பில் 37.87% குறு, சிறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் வணிகங்களை மேம்படுத்துவதிலும், உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதிலும் ஜிஇஎம்-ன் பங்கைக் காட்டுகிறது.

அரசு மின் சந்தை (GeM) வெளிப்படைத்தன்மை, செயல்திறன், உள்ளடக்கிய தன்மையை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவில் பொதுக் கொள்முதலை சிறப்பாக மாற்றியுள்ளது.

Leave a Reply