2024-25-ம் நிதியாண்டில் தனிப்பட்ட மற்றும் வர்த்தக ரீதியிலான சுரங்கங்களிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட மொத்த நிலக்கரி 2025 பிப்ரவரி மாத நிலவரப்படி 167.36 மில்லியன் டன்களை எட்டி சாதனை படைத்துள்ளதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ஆண்டுதோறும் என்ற அடிப்படையில் 32.53% உயர்வைக் குறிப்பதாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மொத்த நிலக்கரி உற்பத்தி 128.45 மில்லியன் டன்னாக இருந்தது.
இந்த நிதியாண்டில் நிலக்கரி விநியோகம் 170.66 மில்லியன் டன்னாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் 128.45 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் என்ற அடிப்படையில் நிலக்கரி விநியோகம் 32.86 சதவீதமாக அதிகரித்துள்ளது. மின்சாரம், எஃகு, சிமெண்ட் போன்ற முக்கிய துறைகளுக்கு நிலையான மற்றும் தடையற்ற நிலக்கரி விநியோகத்தை இது உறுதி செய்வதாக உள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், நிலக்கரி துறையின் வளர்ச்சியை உறுதி செய்ய அந்த அமைச்சகம் முடிவு செய்துள்ளது. வரும் 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டும் வகையில் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை இது எடுத்துக் காட்டுகிறது. நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்வதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளில் நிலக்கரித் துறை முக்கியப் பங்கு வகிக்கும்.
திவாஹர்