பட்ஜெட்டுக்குப் பிந்தைய வேலைவாய்ப்பு குறித்த இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார். “மனித சக்தி, பொருளாதாரம் மற்றும் புத்தாக்கக் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் முதலீடு” என்ற இணையவழிக் கருத்தரங்கின் கருப்பொருளின் முக்கியத்துவத்தைப் பிரதமர் எடுத்துரைத்தார். இந்த ஆண்டு பட்ஜெட் இந்தக் கருத்தை அதிக அளவில் பிரதிபலிக்கிறது என்றும், இந்தியாவின் எதிர்காலத்திற்கான திட்டமாக இது செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு, தொழில்கள், மனித சக்தி, பொருளாதாரம், புத்தாக்க கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் முதலீடுகளுக்கு சமமான முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். திறன் மேம்பாடு மற்றும் திறமை ஆகியவை நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக உள்ளன என்பதைச் சுட்டிக் காட்டிய திரு மோடி, அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தேவைப்படுவதால், இந்தத் துறைகளில் அதிக முதலீடு செய்ய அனைத்து பங்குதாரர்களும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இது நாட்டின் பொருளாதார வெற்றிக்கு இன்றியமையாதது மற்றும் ஒவ்வொரு நிறுவனத்தின் வெற்றிக்கும் அடிப்படையாக அமைகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
“மனித சக்தியில் முதலீடு செய்வதற்கான தொலைநோக்குப் பார்வையானது கல்வி, திறன், சுகாதாரம் ஆகிய மூன்று தூண்களில் அமைந்துள்ளது” என்று கூறிய திரு மோடி, பல பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் கல்வி முறை குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் சந்தித்து வருகிறது என்று குறிப்பிட்டார். தேசிய கல்விக் கொள்கை, ஐ.ஐ.டி.க்களின் விரிவாக்கம், கல்வி அமைப்பில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவின் முழுத் திறனைப் பயன்படுத்துதல் போன்ற முக்கிய முயற்சிகளை அவர் வலியுறுத்தினார். பாடப்புத்தகங்களை மின்னணு மயமாக்கல் நடவடிக்கை மூலம் 22 இந்திய மொழிகளில் கற்பதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
2014-ம் ஆண்டு முதல் 3 கோடிக்கும் அதிகமான இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், 1,000 தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்தியதையும், 5 திறன்மிகு மையங்கள் நிறுவப்பட்டதையும் குறிப்பிட்டார். தொழிற்சாலைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பயிற்சியுடன் இளைஞர்களைத் தயார்படுத்தும் இலக்கை அவர் வலியுறுத்தினார். உலகளாவிய நிபுணர்களின் உதவியுடன், இந்திய இளைஞர்கள் உலக அளவில் போட்டியிடுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த முன்முயற்சிகளில் தொழில்துறை மற்றும் கல்வியாளர்களின் முக்கிய பங்கை சுட்டிக் காட்டிய திரு மோடி, தொழில் துறைகளும், கல்வி நிறுவனங்களும் ஒருவருக்கொருவர் தேவைகளைப் புரிந்துகொண்டு பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், விரைவாக மாறிவரும் உலகிற்கு ஏற்ப இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் கூறினார். செயல்முறை கற்றலுக்கான தளங்களை அணுக வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் மற்றும் நடைமுறை திறன்களை வழங்குவதற்காக பிரதமர்-கல்வி உதவித்தொகை திட்டம் தொடங்கப்பட்டதை எடுத்துரைத்த அவர், இந்த முயற்சியில் ஒவ்வொரு நிலையிலும் அதிகபட்ச தொழில்துறை பங்களிப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மருத்துவத் துறை குறித்து குறிப்பிட்ட திரு மோடி, இந்த பட்ஜெட்டில் மருத்துவ கல்வியில் கூடுதலாக 10,000 மருத்துவ இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவத் துறையில் 75,000 இடங்களை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொலை மருத்துவ வசதிகள் விரிவுபடுத்தப்படுவதை அவர் எடுத்துரைத்தார். பகல்நேர பராமரிப்பு புற்றுநோய் மையங்களை நிறுவுதல் மற்றும் தரமான சுகாதாரம் கடைக்கோடி பகுதி வரை சென்றடைவதை உறுதி செய்வதற்காக மின்னணு சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றையும் அவர் வலியுறுத்தினார். இந்த முன்முயற்சிகள் மக்களின் வாழ்க்கையில் உருமாற்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். இந்த முயற்சிகள் இளைஞர்களுக்கு எண்ணற்ற புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறிய பிரதமர், பட்ஜெட் அறிவிப்புகளின் பலன்கள் அதிகபட்ச எண்ணிக்கையிலான மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், இந்த முயற்சிகளை விரைந்து செயல்படுத்துமாறு தொடர்புடையவர்களைக் கேட்டுக்கொண்டார்.
கடந்த பத்தாண்டுகளில் பொருளாதாரத்தில் முதலீடுகள் எதிர்கால தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் வழிநடத்தப்பட்டு வந்துள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர், 2047-ம் ஆண்டில் இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை சுமார் 90 கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றும், இதற்கு திட்டமிட்ட நகரமயமாக்கல் அவசியமாகிறது என்றும் குறிப்பிட்டார். நிர்வாகம், உள்கட்டமைப்பு, நிதி நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் அதே வேளையில், தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1 லட்சம் கோடி நகர்ப்புற சவால் நிதியை நிறுவுவதற்கான முயற்சியை அவர் அறிவித்தார். “நீடித்த நகர்ப்புற இயக்கம், மின்னணு ஒருங்கிணைப்பு மற்றும் பருவநிலை மீட்சி திட்டங்களுக்காக இந்திய நகரங்கள் அங்கீகரிக்கப்படும்” என்று பிரதமர் குறிப்பிட்டார். தனியார் துறையினர், குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்துறைகள், திட்டமிட்ட நகரமயமாக்கலுக்கு முன்னுரிமை அளித்து முன்னெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அம்ருத் 2.0, நீர்வள இயக்கம் போன்ற முன்முயற்சிகளுக்கான கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
பொருளாதாரத்தில் முதலீடுகள் குறித்து விவாதிக்கும் போது சுற்றுலாத் துறையின் வாய்ப்புகள் மீது கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திரு மோடி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% வரை பங்களிக்கும் திறனை சுற்றுலாத் துறை கொண்டுள்ளது என்றும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டார். உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவை மேம்படுத்த பட்ஜெட்டில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். சுற்றுலாவை மையமாகக் கொண்டு நாடு முழுவதும் 50 தலங்கள் மேம்படுத்தப்படும் என்று கூறிய பிரதமர், இந்த இடங்களில் உள்ள ஓட்டல்களுக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்குவது சுற்றுலாவை எளிதாக்கும் மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்று கூறினார். தங்கும் இடங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் முத்ரா திட்டம் விரிவுபடுத்தப்படுவதை எடுத்துரைத்த திரு மோடி, உலகளாவிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ‘இந்தியாவில் குணப்படுத்துதல்’ மற்றும் ‘புத்தரின் மண்’ போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். “இந்தியாவை உலகளாவிய சுற்றுலா மற்றும் ஆரோக்கிய மையமாக நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று அவர் மேலும் கூறினார்.
சுற்றுலாவானது ஓட்டல் மற்றும் போக்குவரத்து தொழில்களுக்கு அப்பாலும் மற்ற துறைகளுக்கும் வாய்ப்புகளை வழங்குகிறது என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்த சுகாதாரத் துறையில் உள்ள பங்குதாரர்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். யோகா மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவின் திறனை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், கல்வி சுற்றுலாவின் வளர்ச்சிக்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார். இந்தத் திசையில் விரிவான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்திய அவர், இந்த முன்முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல வலுவான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
“நாட்டின் எதிர்காலம் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளால் தீர்மானிக்கப்படுகிறது” என்று கூறிய திரு மோடி, செயற்கை நுண்ணறிவு இந்தியப் பொருளாதாரத்திற்கு பல லட்சம் கோடி ரூபாய் பங்களிப்பு செய்யும் திறனைக் கொண்டுள்ளது என்பதை எடுத்துரைத்து, இந்த திசையில் விரைவான முன்னேற்றத்தின் அவசியத்தையும் குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு பட்ஜெட்டில் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு திறன்களை மேம்படுத்த தேசிய பேரளவு மொழி மாதிரி ஒன்றை உருவாக்கும் திட்டத்தைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தத் துறையில் உலகளாவிய நிலையை விட தனியார் துறையினர் முன்னணியில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “பொருளாதாரத்திற்கு செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை வழங்கக்கூடிய நம்பகமான, பாதுகாப்பான மற்றும் ஜனநாயக நாட்டிற்காக உலக நாடுகள் காத்திருக்கின்றன” என்று கூறிய அவர், தற்போது இந்தத் துறையில் செய்யப்படும் முதலீடுகள் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க பலன்களைத் தரும் என்று கூறினார்.
“உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழலைக் கொண்டதாக இந்தியா மாறியுள்ளது” என்று கூறிய பிரதமர், புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க இந்தப் பட்ஜெட்டில் பல நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி தொகுப்பு நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டார். ‘ நவீன தொழில்நுட்ப நிதியத்திற்கான நிதி’ ஒதுக்கீடு செய்வதன் மூலம் வளர்ந்து வரும் துறைகளில் முதலீடுகள் அதிகரிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி., ஆகியவற்றில் 10,000 ஆராய்ச்சி உதவித்தொகைகள் வழங்கப்படுவதை அவர் குறிப்பிட்டார். இவை ஆராய்ச்சியை ஊக்குவிப்பதோடு, திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்புகளையும் வழங்கும். புதிய கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்துவதில் தேசிய புவிசார்ந்த இயக்கம் மற்றும் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் பங்கையும் பிரதமர் எடுத்துரைத்தார். ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல அனைத்து நிலைகளிலும் கூட்டு முயற்சிகள் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் வளமான கையெழுத்துப் பிரதி பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் ஞான பாரதம் இயக்கத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டிய திரு மோடி, இந்த இயக்கத்தின் கீழ் ஒரு கோடிக்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் (ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவை)மின்னணு மயமாக்கப்படும் என்றும், இது தேசிய மின்னணு களஞ்சியத்தை உருவாக்கும் என்றும் அறிவித்தார். இந்த களஞ்சியம் உலகெங்கிலும் உள்ள அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்தியாவின் வரலாற்று, பாரம்பரிய அறிவையும் ஞானத்தையும் அணுக உதவும் என்று அவர் மேலும் கூறினார். இந்தியாவின் தாவர மரபணு வளங்களைப் பாதுகாக்க தேசிய மரபணு வங்கி அமைக்கப்படுவதையும் பிரதமர் குறிப்பிட்டார். எதிர்கால சந்ததியினருக்கு மரபணு வளங்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கம் என்று அவர் கூறினார். இதுபோன்ற முயற்சிகளை விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இந்த முயற்சிகளில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் துறைகள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
எஸ்.சதிஸ் சர்மா