லால் பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற 126-வது புகுமுகப் பயிற்சித் திட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாநில குடிமைப் பணி அதிகாரிகள், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், பதவி உயர்வு பெற்று இந்திய ஆட்சிப் பணியில் சேர்க்கப்பட்டதற்காக அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். புதிய பொறுப்பை ஏற்கும் அவர்கள் முன்மாதிரியாகத் திகழ்ந்து தங்களைச் சுற்றியுள்ளவர்களும் பொதுச் சேவையில் சிறப்பாகப் பணியாற்ற ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிர்வாகச் செயல்பாடு, அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் தேசிய அளவிலான அணுகுமுறையைப் பின்பற்றுமாறும் குடியரசுத் தலைவர் அறிவுறுத்தினார்.
மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்படுவதும் பொறுப்புணர்வுடன் செயல்படுவதுமே சிறப்பான நிர்வாகத்தின் அடிப்படை என்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். பொதுமக்களை மையமாகக் கொண்ட நிர்வாகம் மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்கள் மீது கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். பொதுமக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
எஸ்.சதிஸ் சர்மா