மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், திரு ஜகத் பிரகாஷ் நட்டா, தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தின் 48வது ஆண்டு விழாவிற்கு இன்று மெய்நிகர் வடிவில் தலைமை வகித்தார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் பேராசிரியர். (டாக்டர்) அதுல் கோயல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனம் என்பது மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும். கல்வி, பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் பிரத்யேக ஆலோசனை சேவைகளுக்கு பெயர் பெற்ற இந்நிறுவனம், நாட்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் திட்டங்களை மேம்படுத்துவதற்கான ஒரு உயர் தொழில்நுட்ப நிறுவனமாகச் செயல்படுகிறது.
திரு நட்டா தமது காணொலி உரையில், “நாட்டில் உள்ள பொது சுகாதார வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் திறனை வளர்ப்பதில் முன்னணியில் உள்ள நிறுவனம் இது ” என்று பாராட்டினார். “நாட்டில் தகுதி வாய்ந்த நிபுணர்களின் அவசரத் தேவையை நிவர்த்தி செய்து, பொது சுகாதாரத்தில் முனைவர் மற்றும் முதுநிலை திட்டங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், திறனை வளர்ப்பதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு தெளிவாகிறது. அதன் ஆராய்ச்சி முன்முயற்சிகள் மற்றும் பல்வேறு அரசுத் திட்டங்களின் மதிப்பீடு ஆகியவை சான்று அடிப்படையிலான கொள்கை வகுப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளன’’ என்று கூறினார்.
மேலும், சுகாதாரம் தொடர்பான உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கும், சுகாதாரக் கல்வியை நவீனமயமாக்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் பாராட்டினார். “இந்த வசதி டிஜிட்டல் கற்றலை செயல்படுத்துவதற்கும், சுகாதார அறிவை நாடு முழுவதும் அணுகுவதற்கும் ஒரு ‘கேம்-சேஞ்சராக’ இருக்கும்” என்று அவர் கூறினார்.
நிறுவனத்தில் உள்ள தேசிய குளிர் சங்கிலி மற்றும் தடுப்பூசி மேலாண்மை வள மையத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு நட்டா, “சேவைகளை வழங்குவது தொடர்பான வல்லுநர்களின் திறனை வளர்ப்பதில் இந்த மையம் மிகப்பெரிய வேலையைச் செய்து வருகிறது. இந்த மையம் சர்வதேச சிறப்பு மையமாக தரம் உயர்த்தப்படுகிறது. இந்த விரிவாக்கம், நாட்டிற்குள் மட்டுமின்றி, உலகளவில் நோய்த்தடுப்பு மற்றும் விநியோகச் சங்கிலியில் இந்தியாவின் தலைமைக்கு ஒரு சான்றாகும்’’ என்று தெரிவித்தார்.
“அனைவருக்கும் ஆரோக்கியத்தை உறுதிசெய்வதற்கும், நமது பொது சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் நாம் அனைவரும் உறுதிப் படுத்துவோம்” என்று திரு நட்டா கூறினார், மேலும் “ஆரோக்கியமான, வலிமையான மற்றும் நெகிழ்ச்சியான இந்தியாவை உருவாக்க முடியும்” என்று இந்தியாவின் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அனைவரும் தொடர்ந்து முக்கியப் பங்காற்ற வேண்டும்’’ என்று அவர் வலியுறுத்தினார்.
கூட்டத்தில் உரையாற்றிய திருமதி. அனுப்ரியா படேல், “இந்தியாவின் பொது சுகாதார நிலப்பரப்பை வலுப்படுத்துவதற்கான அதன் உறுதியான அர்ப்பணிப்புக்காகவும், பொது சுகாதார கல்வி, ஆராய்ச்சி மற்றும் கொள்கை வாதங்களில் அதன் கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாக சிறந்து விளங்குவதற்கும்” தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தைப் பாராட்டினார்.
திவாஹர்