நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் 2025 மார்ச் 10 அன்று தொடங்கிய ஐநா அமைப்பின் மகளிர் நிலை குறித்த ஆணையத்தின் 69-வது அமர்வில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி அன்னபூர்ணாதேவி தலைமையிலான இந்தியப் பிரதிநிதிகள் குழு பங்கேற்றது.
2025 மார்ச் 10 அன்று நடைபெற்ற அமைச்சர்கள் நிலையிலான அமர்வில் உரையாற்றிய திருமதி அன்னபூர்ணா தேவி நாடு முழுவதும் மகளிர் மற்றும் குழந்தைகளின் ஒட்டுமொத்த மேம்பாடு, அதிகாரமளித்தல், பாதுகாப்பு ஆகியவற்றுக்கான இந்திய அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். முக்கியமான 12 துறைகளில் பாலின சமத்துவத்தில் இந்தியாவின் முன்னேற்றத்தை அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
மகளிர் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், ஊட்டச்சத்து, கல்வி, பொருளாதார வாய்ப்புகள் ஆகியவற்றுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்யும் அரசின் முக்கிய திட்டங்களின் தாக்கம் பற்றியும் அமைச்சர் விவரித்தார். மகளிர் மற்றும் குழந்தைகளின் நலன் இந்தியாவின் முன்னேற்றத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது என்று கூறிய திருமதி அன்னபூர்ணா தேவி அனைத்து பெண்களுக்கும் அதிகாரமளிக்கவும், ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பான, ஆதரவான சூழலில் வளர்க்கப்படுவதற்கும் பன்னோக்கு அணுகுமுறையை அரசு செயல்படுத்தி வருகிறது என்று குறிப்பிட்டார்.
இந்த அமர்வில் ஐநா உறுப்பு நாடுகள், அரசு சார்ந்த அமைப்புகள், தனியார் துறை, கொடையாளர்கள் அமைப்பு, கல்வியாளர்கள் அமைப்பு, மகளிர் நல அமைப்புகள், ஐநா முகமைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பெருமளவில் பங்கேற்றனர். இந்த ஆணையத்தின் அமர்வுகள் 2025 மார்ச் 21 வரை நடைபெறவுள்ளன.
எம்.பிரபாகரன்