பஞ்சாப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்.

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இன்று (மார்ச் 12, 2025) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், கடந்த 140 ஆண்டுகளில் பஞ்சாப் பல்கலைக்கழகம் உயர்கல்விக்கான முக்கிய மையமாக வளர்ந்துள்ளது என்று  குறிப்பிட்டார். இந்தப் பல்கலைக்கழகம் கல்வி, விளையாட்டு, ஆராய்ச்சி மற்றும் கலாச்சாரத் துறைகளில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். இந்தப் பல்கலைக்கழகம் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பையை 17 முறை வென்றுள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தப் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்கு இது ஒரு சான்றாகும் என்று அவர் கூறினார். இந்தப் பல்கலைக்கழக மாணவர்களான மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோர் 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்று நாட்டிற்கு மிகுந்த பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

கல்வித்துறை-தொழில் துறை இடையேயான தொடர்பை ஊக்குவிப்பதற்காகப் பஞ்சாப் பல்கலைக்கழகத்திற்கு குடியரசுத் தலைவர் பாராட்டு தெரிவித்தார். பல்கலைக்கழக-தொழில்துறை இணைப்பு மற்றும் எதிர்காலத் தயார்நிலை குறித்து பல்கலைக்கழகத்தின் கொள்கை வகுப்பாளர்கள் அதிகம் பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பல்கலைக்கழகத்தின் பாடங்கள் பயன்பாட்டு அடிப்படையிலான கல்வியாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். கல்வி மாணவர்களின் வாழ்க்கைப் பயணத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். வரும் காலங்கள் சவாலானதாக இருக்கும் என்றும், போட்டி மனப்பான்மை அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்றும் அவர் கூறினார். எனவே, ஒவ்வொரு மாணவருக்கும் சவால்களை எதிர்கொள்ள நேர்மறையான மனநிலையும் மேம்பட்ட திறனும் இருப்பது முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பற்றிய அறிவைப் பெறுவதும் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வதும் அவற்றைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான திறனும் வெற்றிக்கு அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் பெருமைக்குரிய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்தது உங்களுக்கு பெருமை அளிப்பதாக இருக்கிறது என்று  மாணவர்களிடம் குடியரசுத் தலைவர் கூறினார். குடியரசுத் தலைவர், பிரதமர், நோபல் பரிசு பெற்றவர்கள் முதல் தலைவர்கள் வரை பல்வேறு துறைகளில் சிறப்பான ஆளுமைத்திறம் கொண்டவர்களை  இந்தப் பல்கலைக்கழகம் சமூகத்திற்கு வழங்கியுள்ளது. இந்தப் பாரம்பரியத்தை மாணவர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அவர்களின் முயற்சிகள் மற்றும் தொலைநோக்கு சிந்தனைகள் மூலம் சமூகம், நாடு மற்றும் உலகிற்கு பயனுள்ள பங்களிப்பை வழங்க முடியும் என்றும், அவர்களின் கனவுகளை நனவாக்க முடியும் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.

Leave a Reply