டீப்-டெக் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவ தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் எதிர்கால முன்முயற்சிகள் பற்றி மதிப்பீடு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அவர், தற்போதுள்ள நான்கு தொழில்நுட்ப புதிய கண்டுபிடிப்பு மையங்கள், தொழில்நுட்ப மாற்றத்திற்கான ஆராய்ச்சி பூங்காக்களாக மாற்றப்பட இருப்பதை எடுத்துரைத்தார்.
கான்பூர் ஐஐடி (சைபர் பாதுகாப்பு), பெங்களூர் ஐஐஎஸ்சி (ரோபோக்கள்), இந்தூர் ஐஐடி (சுகாதாரம்), தன்பாத் ஐஎஸ்எம் (சுரங்கம்) ஆகிய இடங்களில் உள்ள இந்த மையங்கள் மாற்றத்திற்கான ஆராய்ச்சிக்குரிய உள்கட்டமைப்புகளையும், நிதி உதவியையும் பெறும் என்று அவர் கூறினார்.
ஹைட்ரஜன் எரிசக்தி, குவாண்டம் கம்ப்யூட்டிங், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையங்கள் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்ப தளங்களில் இந்தியாவின் முன்னேற்றத்தில் இந்த கூட்டம் கவனம் செலுத்தியது.
அமலாக்கத்தை விரைவுப்படுத்தவும், கொள்கை ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும், புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்துடன் ஒருங்கிணைப்பு அவசியம் என்பதை டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார்.
தேசிய குவாண்டம் இயக்கத்தின் கீழ், பெங்களூர் ஐஐஎஸ்சி, பம்பாய் ஐஐடி, தில்லி ஐஐடி, சென்னை ஐஐடி ஆகியவற்றில் உள்ள குவாண்டம் தொழில்நுட்ப மையங்களின் முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
எம்.பிரபாகரன்