உலக நுகர்வோர் உரிமைகள் தினம், ஆண்டுதோறும் மார்ச் 15 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது நுகர்வோர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. நுகர்வோரின் அனைத்து அடிப்படை உரிமைகளை மேம்படுத்துவதற்கும், அந்த உரிமைகள் பாதுகாக்கப்படுவதை ஊக்குவிப்பதற்கும் இது ஒரு நல் வாய்ப்பாக அமைகிறது. உலக நுகர்வோர் உரிமைகள் தினம் முதன்முதலில் 1983-ல் கடைபிடிக்கப்பட்டது. 1962 மார்ச் 15-ம் தேதி அமெரிக்க மாநாட்டில் அந்நாட்டு அதிபர் ஜான் எஃப் கென்னடி உரையாற்றியதை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. அங்கு அவர் நுகர்வோர் உரிமைகளை முறையாக அங்கீகரித்த முதல் உலகத் தலைவராக விளங்கினார்.
2025-ம் ஆண்டு கடைபிடிக்கப்படும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தின் கருப்பொருள், “நிலையான வாழ்க்கை முறைகளுக்கு நியாயமான மாற்றம்” என்பதாகும். இந்தக் கருப்பொருள் அனைத்து நுகர்வோருக்கும் நிலையான, ஆரோக்கியமான வாழ்வியல் முறை கிடைக்கக்கூடியதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் அமைய வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அதே நேரத்தில் இந்த மாற்றங்கள் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தேவைகளை நிலைநிறுத்துவதை உறுதி செய்கின்றன. உலக அளவில் வலுவான நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலுக்கு இது அழைப்பு விடுக்கிறது.
மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை, நுகர்வோருக்கு அதிகாரம் அளித்தல், குறை தீர்க்கும் வழிமுறைகளை வலுப்படுத்துதல், வெளிப்படையான, நியாயமான சந்தையை உறுதி செய்தல் ஆகியவற்றுக்காக பல புதிய முயற்சிகள் மற்றும் கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 2024-ம் ஆண்டில், மின்னணு வர்த்தக நடைமுறைகளுக்கான ஒழுங்குமுறைகள், டிஜிட்டல் நுகர்வோர் பாதுகாப்பு, உற்பத்திப் பாதுகாப்பு தரநிலைகள், நீடித்த நுகர்வுக்கான முயற்சிகள் ஆகியவை அடங்கும்.
திவாஹர்