மின் வணிக (இ-காமர்ஸ்) தளங்கள் மூலம் இணக்கமற்ற தயாரிப்புகளின் விநியோகத்தைத் தடுக்க, இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) லக்னோ, குருகிராம், தில்லி போன்ற நகரங்களில் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட முன்னணி இ-காமர்ஸ் தளங்களின் பல கிடங்குகளில் தேடல், பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
லக்னோவில் உள்ள அமேசான் கிடங்கில் 07 மார்ச் 2025 அன்று நடத்தப்பட்ட சோதனையில், 215 பொம்மைகள் உள்ளிட்டவற்றை பிஐஎஸ் பறிமுதல் செய்தது. இவை அனைத்தும் பிஐஎஸ் சான்றிதழ் இல்லாதவை. முன்னதாக, 2025 பிப்ரவரியில், குருகிராமில் உள்ள ஒரு அமேசான் கிடங்கில் இதேபோன்ற நடவடிக்கையின் விளைவாக 34 உலோக தண்ணீர் பாட்டில்கள், 25 பொம்மைகள், 7 பிவிசி கேபிள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், குருகிராமில் உள்ள இன்ஸ்டாகார்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் இயக்கும் பிளிப்கார்ட் கிடங்கில் நடந்த சோதனையில், 534 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாட்டில்கள், 134 பொம்மைகள், 41 ஸ்பீக்கர்களை பிஐஎஸ் பறிமுதல் செய்தது. தில்லியில் உள்ள டெக்விஷன் இன்டர்நேஷனலின் இரண்டு வெவ்வேறு கிடங்குகளில் பிஐஎஸ் சோதனைக நடத்தியது. இதில் பிஐஎஸ் சான்றிதழ் இல்லாத சுமார் 7,000 மின்சார நீர் ஹீட்டர்கள் உள்ளிட்டவெ கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.
பிஐஎஸ் சட்டம், 2016-ன் பிரிவுகள் 17 (1), 17 (3) ஆகியவற்றை மீறியதற்காக டெக்விஷன் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் மீது பிஐஎஸ் ஏற்கனவே இரண்டு நீதிமன்ற வழக்குகளை தாக்கல் செய்துள்ளது. ஈ-காமர்ஸ் தளங்கள் உட்பட சந்தையில் கிடைக்கும் நுகர்வோர் தயாரிப்புகள் பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக பிஐஎஸ், சந்தைக் கண்காணிப்பை தீவிரமாக நடத்தி வருகிறது. கண்காணிப்பின் ஒரு பகுதியாக, பிஐஎஸ் பல்வேறு நுகர்வோர் தயாரிப்புகளை வாங்கி அவற்றில் பரிந்துரைக்கப்பட்ட தரங்கள் குறித்துக் கடுமையான சோதனை மேற்கொள்கிறது
சந்தை கண்காணிப்பின் கீழ் உள்ள தயாரிப்புகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் நுகர்வோர் பொருட்களான உள்நாட்டு பிரஷர் குக்கர்கள், அறை ஹீட்டர்கள், பிவிசி கேபிள்கள், எரிவாயு அடுப்புகள், பொம்மைகள், இரு சக்கர வாகன தலைக்கவசங்கள், சுவிட்சுகள், சாக்கெட்டுகள், உணவு பேக்கேஜிங்கிற்கான அலுமினிய படலங்கள் உள்ளிட்டவை அடங்கும். தரமற்ற பொருட்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு, பொது நலன் கருதி மத்திய அரசு இந்த பொருட்களுக்கு பிஐஎஸ் சான்றிதழைக் கட்டாயமாக்கியுள்ளது.
இருப்பினும், அதன் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, பிஐஎஸ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும், அமேசான், பிளிப்கார்ட், மீஷோ, மிந்த்ரா, பிக்பாஸ்கெட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் பல சான்றளிக்கப்படாத தயாரிப்புகள் விற்கப்படுவதை பிஐஎஸ் அடையாளம் கண்டுள்ளது. சான்றளிக்கப்படாத தயாரிப்புகளில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாதவை அல்லது தவறான உரிம எண் (சிஎம் / எல் எண்) கொண்ட ஐஎஸ்ஐ முத்திரையைக் கொண்டவை அடங்கும். இந்த சான்றளிக்கப்படாத தயாரிப்புகள் நுகர்வோருக்கு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துகின்றன.
இது தொடர்பாக, இந்த அனைத்து இ-காமர்ஸ் தளங்களுக்கும் பிஐஎஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தயாரிப்புகள் நுகர்வோருக்கு கிடைப்பதற்கு முன்பு முறையாக சான்றளிக்கப்பட்டதை உறுதி செய்ய பிஐஎஸ் அறிவுறுத்தியுள்ளது.
பிஐஎஸ் கேர் செயலியைப் (BIS Care app) பயன்படுத்தி தகவலறிந்த கொள்முதல் முடிவுகளை எடுக்குமாறு பிஐஎஸ் நுகர்வோரை வலியுறுத்துகிறது. இந்தச் செயலி நுகர்வோருக்கு கட்டாய பிஐஎஸ் சான்றிதழ் தேவைப்படும் தயாரிப்புகள் குறித்த முக்கியமான தகவல்களை வழங்குகிறது. நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதில் பிஐஎஸ் உறுதிபூண்டுள்ளது.
எம்.பிரபாகரன்