நாட்டின் வடகிழக்கு பகுதிகளுக்கு அளப்பரிய பங்காற்றியவரும் தேசிய பாதுகாப்புக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியவருமான மேஜர் பாப் காதிங்-ன் இலக்குகளை அடைவதற்கான பயணத்தை அச்சமின்றி மேற்கொள்ள வேண்டுமென்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். 2025-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி, டெல்லி கண்டோன்மெண்டில் ராணுவம், அசாம் ரைபிள்ஸ் மற்றும் இந்திய ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த மேஜர் பாப் காத்திங் நினைவுநாள் நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மேஜர் பாப் காதிங்கிற்கு புகழஞ்சலி செலுத்திய திரு ராஜ்நாத் சிங், நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். போர்க்களத்தில் துணிச்சல், உத்திசார் நடவடிக்கைகள் மூலம் வரலாற்றில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்ற இந்தியாவின் மகத்தான நபர் மேஜர் காதிங் என்று அவர் குறிப்பிட்டார். அத்தகைய மாமனிதர்களின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டியது மக்களின் கடமை என்று அவர் கூறினார்.
தவாங் மட்டுமின்றி, ஒட்டுமொத்த வடகிழக்குப் பிராந்தியத்தையும் ஒருங்கிணைத்து, மேம்படுத்தி, மறுகட்டமைப்பு செய்வதில் மேஜர் காதிங்-ன் பங்களிப்பிற்கு பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவதில் மேஜர் பாப் காதிங் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்குவதன் மூலம் ஜம்மு-காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் எவ்வித அசம்பாவிதமுமின்றி இணைக்கப்பட்டதை சுட்டிக் காட்டினார். அனைத்து தரப்பினரின் நலன்களை கருத்தில் கொண்டு முழு அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்தப் பணிகள் அமைதியாக நடைபெற்றதாக திரு.ராஜ்நாத் சிங் கூறினார்..
திவாஹர்