திருவிழாக்களின் போது ஒவ்வொரு ரயில் நிலையமும் பெரும் கூட்டத்தை எதிர்கொள்கின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகவும், பயணிகளின் நடமாட்டத்தை முறைப்படுத்தவும், அரசாங்கமானது ரயில்வே காவல் படை, உள்ளூர் காவல் துறை மற்றும் உள்ளூர் சிவில் நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் ஈடுபடுத்தி நிலையத்திற்குரிய குறிப்பிட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு, அதன்படி பயணிகளின் வருகையை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளா 2025-ன் போது பயணிகளின் நெரிசலைக் கையாள, பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள 9 ரயில் நிலையங்களில் கூடுதலாக ஏழு நடைமேடைகள் உருவாக்கப்பட்டதன் மூலம் மொத்தம் 48 நடைமேடைகள் பயன்பாட்டுக்கு அமைந்தது. யாத்ரீகர்களின் சீரான பயணத்தை உறுதி செய்வதற்காக இந்த நிலையங்களுக்கான அணுகு சாலைகளும் அகலப்படுத்தப்பட்டுள்ளன. மொத்தத்தில், 17 புதிய நிரந்தர தங்குமிடங்கள் கட்டப்பட்டன. இதனால் இந்த தங்குமிடங்களின் கையாளும் திறன் 21,000-லிருந்து 1,10,000 க்கும் அதிகமாக அதிகரித்தது. அத்துடன், 21 புதிய சாலை மேம்பாலங்கள் மற்றும் சாலை கீழ் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
கும்பமேளாவின் போது சுமூகமான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட ரயில் செயல்பாட்டுத் திட்டம் பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நிலையமும் அதன் சொந்த கட்டுப்பாட்டு அறையைக் கொண்டிருந்தன. பிரயாக்ராஜ் சந்திப்பில் ஒரு மத்திய முதன்மை கட்டுப்பாட்டு அறை இருந்தது. ரயில் செயல்பாடுகள் மற்றும் நிலையங்களில் கூட்டம் மேலாண்மைக்காக நிலையான இயக்க நடைமுறைகள் உருவாக்கப்பட்டன.
மகாகும்பமேளா-2025-க்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் நிகழ்நேர கண்காணிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 116 முக அங்கீகார அமைப்பு கேமராக்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் உட்பட மொத்தம் 1200 கண்காணிப்பு கேமராக்கள் தடங்களை கண்காணிப்பதற்கும் நிலையங்களுக்கு அணுகு சாலைகளில் கூட்டத்தை நிர்வகிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டன.
பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரயில்வே பாதுகாப்புப் படை, அரசு ரயில்வே போலீஸ் (ஜிஆர்பி) மற்றும் துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த 15,000 வீரர்கள் கூடுதலாக நிறுத்தப்பட்டனர்.
மேலும், வாரணாசி, அயோத்தி, பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா, தனப்பூர் மற்றும் புது தில்லி போன்ற பயணிகள் அதிகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் பிற முக்கிய ரயில் நிலையங்களிலும் கூடுதல் படையினர் நிறுத்தப்பட்டனர்.
புது தில்லி ரயில் நிலையத்தில் போதுமான உள்கட்டமைப்பு உள்ளது. இதில் 16 நடைமேடைகள் உள்ளன. பஹர்கஞ்ச் மற்றும் அஜ்மீரி நுழைவு வாயிலிலிருந்து செல்வதற்கு 3 நடைமேம்பாலங்கள் உள்ளன. நிலையத்திற்கு முன்னால் பெரிய திறந்தவெளி அமைப்பும் உள்ளது. புதுதில்லி ரயில் நிலையத்தில் பண்டிகைகள் மற்றும் கும்பமேளா, சத், ஹோலி போன்ற நிகழ்வுகளின் போது பயணிகளின் கூட்டம் தொடர்ந்து திறம்பட கையாளப்படுகிறது.
மேலும், அமிர்த பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் புதுதில்லி ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
திவாஹர்