உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழக சதுப்புநிலங்களை அறிவிக்கை செய்ய வேண்டும்!- ராமதாஸ் வலியுறுத்தல்.

உலகத் தண்ணீர் நாள் மார்ச் 22&ஆம் நாளான நாளை கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரங்களான சதுப்பு நிலங்களை அறிவிக்கை செய்து பாதுகாக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. நீர்வளங்களைக் காப்பதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபை 2025 ஆம் ஆண்டிற்கான உலக தண்ணீர் நாள் கருப்பொருளாக ‘பனிப்பாறை பாதுகாப்பு’ என்பதை அறிவித்துள்ளது. பூவுலகின் நீர் சுழற்சியில் பனிக்கட்டியாக உறைந்திருக்கும் நீரின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உலகின் ஒட்டுமொத்த நீர்வளத்தில் 97.5% கடலில் உப்புநீராக உள்ளது. மீதமுள்ள 2.5% மட்டுமே நன்னீர் வளமாகும். இந்த நன்னீர் வளத்திலும் 70% துருவங்கள் மற்றும் மலைகளில் பனிப்பறைகளாக உள்ளன. புவியின் நிலப்பரப்பில் 10% பனிப்பாறைகளாக உள்ளன.

பனிப்பாறைகள் மிக முதன்மையான ஒரு நீர் வள ஆதாரமாக உள்ளன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பனிப்பாறைகள் காலநிலை மாற்றத்தின் காரணமாக வேகமாக உருகிவருகின்றன. 1900 ஆண்டுக்கு பின்னர் கடல் மட்டம் 22 செ.மீ உயர்ந்துள்ளது. இதற்கு பனிப்பாறைகள் உருகுவதே காரணமாகும். 1900 & 1990 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் உருகிய அளவை விட 2006 & 2015 ஆம் ஆண்டுகளுக்கு இடையே 2.5 மடங்கு அதிகமாக பனிப்பாறைகள் உருகியதாக ஐபிசிசி அமைப்பு கணித்துள்ளது. எனவே, பனிப்பாறைகளை பாதுகாப்பது ஒரு போர்க்கால அடிப்படையிலான தேவை என ஐநா அவை தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டில் பனிப்பாறைகள் இல்லை. ஆனால், பனிப்பாறைகள் இல்லாத பகுதிகளும் கூட பனிப்பாறைகள் அழிவுக்கு காரணமாகின்றன. காலநிலை மாற்றத்துக்கு காரணமாக உள்ள பசுமை இல்ல வாயுக்கள் உலகின் எந்த பகுதியில் வெளியானாலும் அவை பனிப்பாறைகளை பாதிக்கிறது. அதே போன்று பனிப்பாறைகள் அழிவதால் நீர் சுழற்சியில் ஏற்படும் மாற்றம் உலகின் எல்லா பகுதிகளையும் பாதிக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் காலநிலை மற்றத்தைக் கட்டுப்படுத்தவும், அதன் கேடான விளைவுகளை எதிர்கொள்ளவும் போர்க்கால வேகத்தில் செயல்பட வேண்டும். அதை நினைவூட்டும் வகையில் உலக தண்ணீர் நாள் அமைந்துள்ளது.

இந்திய மக்களில் 7% பேர் தமிழ்நாட்டில் வசிக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டின் நிலப்பரப்பு இந்தியாவின் நிலப்பரப்பளவில் 4% மட்டுமே. நீர்வளம் அதைவிட குறைவாக 3% மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டில் தனிநபர் ஒருவருக்கு கிடைக்கக் கூடிய சராசரி நீர் அளவு வெறும் 590 கன மீட்டர் மட்டுமே. இது இந்தியாவின் தனிநபர் சராசரி அளவான 1508 கன மீட்டரை விட மிகக் குறைவு. சர்வதேச அளவில் தீர்மானிக்கப்பட்ட 1700 கன மீட்டரை விட மிக மிகக் குறைவு. தற்போதைய நிலை நீடித்தால், 2050 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஒருவருக்கு கிடைக்கக் கூடிய நீரின் அளவு 416 கன மீட்டராக குறைந்துவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தின் காரணமாக மழைப்பொழிவில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஒருபுறம் வறட்சி அதிகமாகிறது. மறுபுறம் மிகக் குறுகிய காலத்தில் மிக அதிக அளவு மழைப் பொழிவு ஏற்பட்டு வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. இவற்றால் தண்ணீர் தட்டுப்பாடு மென்மேலும் மோசமடையக்கூடும். எனவே, தமிழ்நாட்டின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் காப்பாற்ற போர்க்கால வேகத்தில் நீர்வள ஆதாரங்களை காப்பாற்றவும் மேம்படுத்தவும் வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 34 ஆறுகளையும் மேம்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் சுமார் 41,000 ஏரிகளை மீட்டு, அவற்றின் முழு கொள்ளவை உறுதி செய்ய வேண்டும்.

நீர் தேங்கும் நிலப்பகுதிகள் சதுப்புநிலங்கள் எனப்படுகின்றன. ஏரி, குளம், குட்டை, தாங்கல், கழிவேலி, சேற்று நிலம், அலையாத்தி காடு அனைத்தும் சதுப்புநிலங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் பெருவாரியான சதுப்புநிலங்கள் பயனற்ற நிலங்களாக உருமாற்றப்பட்டுள்ளன. திடக்கழிவுகள், கழிவு நீர், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட கேடுகளால் நாசமாக்கப்பட்டுள்ளன. சதுப்புநிலத்தை பாதுகாப்பதற்கான ‘சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 செயலாக்கப்படவில்லை. இந்த விதிகளின் கீழ் அறிவிக்கை செய்யப்படும் நீர் நிலைகளை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது.

அவற்றின் எல்லையை மாற்ற முடியாது. ஆக்கிரமிக்க முடியாது. மாசுபடுத்த முடியாது. ஆனால், தமிழ்நாட்டில் சதுப்புநிலங்கள் ஆணையம் 26.11.2018 அன்று உருவாக்கப்பட்டது. அதிலிருந்து 22.03.2025 உலக தண்ணீர் நாள் வரை 6 ஆண்டு 3 மாதம் 2 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால், ஒரே ஒரு சதுப்புநிலம் கூட 2017 சதுப்புநில விதிகளின் கீழ் சதுப்புநிலமாக சட்டப்படி அறிவிக்கை செய்யப்படவில்லை. இஸ்ரோ சதுப்புநில வரைபடம் 2021 பட்டியலில் உள்ள 2.25 எக்டேருக்கு கூடுதலான பரப்பளவு கொண்ட தமிழத்தின் 26,883 சதுப்புநிலங்களின் எல்லைகளை மூன்று மாத காலத்திற்குள் வரையறை செய்து தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் 11.12.2024-ஆம் நாள் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மார்ச் 22, உலக தண்ணீர் நாளை முன்னிட்டு 29.03.2025 அன்று கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இக்கூட்டதின் கருப்பொருளாக ‘உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல்’ என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி, அந்தந்த ஊராட்சிகளின் நீர்நிலைகளை 2017 சதுப்புநில விதிகளின் கீழ் அறிவிக்கை செய்யக் கோரும் தீர்மானத்தினை அனைத்து கிராமசபையில் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply