புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையானது சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் உயிரி அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றில் சிறந்து விளங்குவதன் மூலம் உலகம் முழுவதும் நன்மதிப்பைப் பெற்றுள்ளது என்று கூறினார். நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலிருந்து இங்கு சிகிச்சை பெற வரும் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு நம்பிக்கையின் அடையாளமாக இது திகழ்கிறது எனக் கூறினார்.
தேசிய அளவில் மட்டுமின்றி, உலக அளவிலும் சுகாதாரப் பராமரிப்பில் எய்ம்ஸ் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். புதுமையான ஆராய்ச்சி மற்றும் சிறந்த முறையில் நோயாளி பராமரிப்பு மூலம் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான இந்த நிறுவனத்தின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனை தனது அனைத்து முயற்சிகளிலும் நல்ல நிர்வாகம், வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பொறுப்பேற்கும் தன்மையை மேம்படுத்துவதை உறுதி செய்ய எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். எந்தவொரு நிறுவனத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் நல்ல நிர்வாகம் அவசியம் என்று கூறிய அவர், இதற்கு எய்ம்ஸ் மருத்துவமனையும் விதிவிலக்கல்ல என்றார்.
உணர்வு ரீதியான ஆரோக்கியம் குறித்து பேசிய குடியரசுத் தலைவர், இன்றைய உலகில் இது கடுமையான சவாலாக உள்ளது என்று கூறினார். விலைமதிப்பற்ற உயிரின் இழப்பைத் தவிர வாழ்க்கையில் ஒவ்வொரு இழப்பும் சரிசெய்யக்கூடியது தான் என்றும் அவர் கூறினார். மனநல பிரச்சினை குறித்த விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்குமாறு எய்ம்ஸ் மருத்துவர்களைக் குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டார்.
பட்டம் பெற்ற மாணவர்களிடையே உரையாற்றிய அவர், பின்தங்கியவர்களுக்கு உதவுவதற்கான எந்த வாய்ப்பையும் ஒருபோதும் புறக்கணிக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். நாட்டின் பல பகுதிகளில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவ நிபுணர்கள் இல்லை என்றும் அந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு மருத்துவ சேவை செய்வது குறித்து எய்ம்ஸ் மாணவர்கள் பரிசீலிப்பார்கள் என்று குடியரசுத் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.
திவாஹர்