ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள் தலைமையகம், அறிவியல் தொழில்நுட்பதுறை இடையே 2025 மார்ச் 21-ம் தேதி புதுதில்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் ஆயுதப் படைகளுக்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு துறையின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை ஆகும்.
ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி.மேத்யூ, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் திரு அபய் கரண்டிகர் ஆகியோர் முன்னிலையில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைகளின் துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் சஞ்சய் வத்சயன், அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கூடுதல் செயலாளர் திரு சுனில் குமார் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பாதுகாப்பு தொழில்நுட்ப ஆராய்ச்சியை தேசிய அறிவியல் முன்முயற்சிகளுடன் இணைப்பதன் மூலம் ஆயுதப்படைகளின் அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவாக அறிவியல் தொழில்நுட்பத்தின் விரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திறன்களை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இதன் மூலம் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பங்களில் பாதுகாப்புத் துறையின் தற்சார்பு நிலையை மேம்படுத்துகிறது.
ஆராய்ச்சி உள்கட்டமைப்பு, துறை சார்ந்த நிபுணத்துவம், கல்வி நிறுவனங்களை அணுகுவதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்த ஒப்பந்தம் மேம்பட்ட ராணுவ தொழில்நுட்பங்களை வளர்ப்பதிலும், புதுமைகளை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துவுதுடன், முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு திறன்களில் தன்னம்பிக்கையை உருவாக்கும் ஒட்டுமொத்த இலக்கை அடைய உதவிடும்.
இந்த ஒப்பந்தம் அதிநவீன ஆராய்ச்சியை ஊக்குவிப்பதுடன் இணைந்து செயல்படுவதற்கான உறுதிப்பாட்டையும் எடுத்துரைக்கிறது. ‘தற்சார்பு இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையுடன் நாட்டின் பாதுகாப்பு தயார்நிலையை மேம்படுத்துவதற்கான முழுமையான செயல்திறனையும் வலியுறுத்துகிறது.
திவாஹர்