ஊழலை மறைக்கவே தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையை திமுக கையில் எடுத்துள்ளதாக அஇஅதிமுக குற்றம் சாட்டியுள்ளது!- எடப்பாடி பழனிசாமி.

இன்று உயிரோடு இருக்கிறோம், நாளை அது இருக்கிறோமா என்பது தெரியாது. அப்படிப்பட்ட ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து வருகிறது என்று இ.பி.எஸ்., குற்றம்சாட்டி உள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் அவர் அளித்த பேட்டி;

2025-26 நிதிநிலை அறிக்கை ஒரு கண்துடைப்பு நாடகமாக தான் பார்க்கப்படுகிறது. இன்னும் இந்த ஆட்சிக்கு 10 மாத காலம் தான் உள்ளது. இந்த 10 மாத காலத்தில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்ற முடியாத நிலைதான் ஏற்படும்.

ஏன் என்றால் நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் போடப்பட்டு, பணிகள் தொடங்க வேண்டும் என்பது இயலாத காரியம். இப்போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தேர்தலுக்காக, ஓட்டுகளை பெறுவதற்காக தான் பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் கெட்டு விட்டது. விண்ணை முட்டுகின்ற அளவுக்கு விலைவாசி உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் வீடுகளுக்கு பயன்படுத்துகிற மின் கட்டணம் உயர்வு, தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி, வீட்டுவரி, குடிநீர் உயர்வு என்று எல்லா வகையிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

4 ஆண்டுகாலம் இந்த ஆட்சியில் மிக பிரச்னையாக இருப்பதை எல்லாம் மறைக்க தொகுதி மறு சீரமைப்பு என்ற நாடகத்தை முதல்வர் ஆடுகிறார். தொகுதி மறுசீரமைப்பு நாடாளுமன்றத்தில் கேட்க வேண்டும். இதே தி.மு.க., எம்.பி.,க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துகின்றனர். அங்கே காங்கிரஸ் எம்.பி.,க்கள் கலந்து கொள்ளவில்லையே?

நேற்றைய தினம் சென்னையில் பல்வேறு கட்சிகள் தலைவர்கள், மாநில முதல்வர்களை அழைத்து பேசுவது என்பது, தி.மு.க., அரசு மீது மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் என்பதை மடை மாற்றுவதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி.

நாங்கள் மக்களின் பிரச்னைகளைத் தான் கூறுகிறோம். அமலாக்கத்துறை மதுபான விற்பனையில் ரூ.1000 கோடி முறைகேடு என்று ஊடகங்களில் செய்தியை வெளியிட்டுள்ளனர். தி.மு.க., ஆட்சியில் ஊழல் நடைபெற்றுள்ளது என்பது நிரூபணமாகி இருக்கிறது. நாங்கள் சொன்னது எல்லாம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கலால்துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.

அ.தி.மு.க.,வில் சசிகலா, ஓ.பி.எஸ்.,சை சேர்த்துக் கொள்வதாக இப்போது வரைக்கும் எந்த திட்டமும் இல்லை. ராஜ்ய சபா உறுப்பினர் தேர்ந்தெடுக்கும் தேர்தல் பற்றிய அறிவிப்பு வந்தவுடன் யார், யாருக்கு சீட் என்பது தெரிவிக்கப்படும்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தான் ஒரு நிலையாக தெரியும். அ.தி.மு.க.,வை பொறுத்தவரை கொள்கை என்பது வேறு. கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது நிலையானது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைத்து, வாக்குகள் சிதறாமல் ஒன்றாக சேர்த்து அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு தான் கூட்டணி அமைக்கிறோம்.

இவர்கள் (தி.மு.க.,) போல் நிரந்தர கூட்டணி கிடையாது. தி.மு.க., நிலையாக இருப்போம் என்று கூறுகிறார்கள், அப்படி என்றால் ஒரு கட்சியாக இருந்துவிடலாமே? எதற்கு 7 கட்சிகள் கூட்டணி. மக்களின் பிரச்னைகளை எடுத்து வைப்பதற்கு அ.தி.மு.க., என்றுமே சளைத்தது அல்ல. தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தமிழக பிரச்னைகள் எதை பற்றியும் ஒன்றும் சொல்வது இல்லை.

எவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை. எதையாவது பேசுகிறார்களா? பல்வேறு தரப்பில் போராட்டம் நடக்கிறது. அந்த போராட்டம் பற்றி கூட கம்யூனிஸ்ட் கட்சி நினைப்பது இல்லை.

Leave a Reply