சத்தீஸ்கர் சட்டப் பேரவையின் வெள்ளி விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்.

ராய்ப்பூரில் இன்று (மார்ச் 24, 2025) நடைபெற்ற சத்தீஸ்கர் சட்டப் பேரவையின் வெள்ளி விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், சத்தீஸ்கர் சட்டப் பேரவை ஜனநாயக மரபுகளின் மிக உயர்ந்த தரத்தை நிர்ணயித்துள்ளது என்று கூறினார். அவை நடவடிக்கைகளின் போது எல்லை மீறும் உறுப்பினர்களைத் தாமாகவே இடைநீக்கம் செய்யும் அசாதாரண விதியை அது உருவாக்கியுள்ளது என்று கூறினார். கடந்த 25 ஆண்டுகளில், அவைக் காவலர்கள் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். சத்தீஸ்கர் சட்டப் பேரவை சிறந்த அவை நடத்தைக்கான ஒரு தனித்துவமான உதாரணத்தை நாட்டின் பிற பகுதிகளுக்கு மட்டுமல்ல, உலகின் அனைத்து ஜனநாயக அமைப்புகளுக்கும் வழங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

பெண் சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்ற பெண்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார். பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்களை அவர்கள் ஊக்குவிக்கும்போது, அனைவரின் கவனமும் அந்தப் பெண்கள் மீது ஈர்க்கப்பட்டு அவர்களின் வளர்ச்சிக்கான பாதை அமைக்கப்படும் என்று அவர் கூறினார். ஆசிரியர்கள் அல்லது அதிகாரிகள், சமூக சேவகர்கள் அல்லது தொழில்முனைவோர், விஞ்ஞானிகள் அல்லது கலைஞர்கள், தொழிலாளர்கள் அல்லது விவசாயிகள் என யாராக இருந்தாலும், பெரும்பாலும் நமது சகோதரிகள் அன்றாட வீட்டுப் பொறுப்புகளை நிறைவேற்றக் கடினமாகப் போராடிக் கொண்டே வெளி உலகில் தங்களுக்கான இடத்தை உருவாக்குகிறார்கள் என்று அவர் கூறினார். அனைத்துப் பெண்களும் ஒருவருக்கொருவர் அதிகாரத்தை  அளித்துக்கொள்ளும்போது, நமது சமூகம் மேலும் வலுவானதாகவும், உணர்ச்சி மிக்கதாகவும் மாறும் என்று அவர் தெரிவித்தார்.

சத்தீஸ்கரில் வளர்ச்சிக்கான ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று குடியரசுத் தலைவர் கூறினார். சிமெண்ட், கனிமத் தொழில், எஃகு, அலுமினியம் மற்றும் மின் உற்பத்தி போன்ற துறைகளில் வளர்ச்சிக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இந்த அழகிய மாநிலம் பசுமையான காடுகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பிற இயற்கை வரங்கள் நிறைந்தது. வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்லும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மாநிலத்தின் கொள்கை வகுப்பாளர்களை அவர் வலியுறுத்தினார். நவீன வளர்ச்சிக்கான பயணத்துடன் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் இணைக்கும் பொறுப்பும் அவர்களுக்கு உள்ளது என்று அவர் கூறினார்.

Leave a Reply