ஒருங்கிணைந்த பாதுகாப்புச் சேவைகள் தேர்வு (II) 2024-ன் இறுதி முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது (யு.பி.எஸ்.சி.) 2024 செப்டம்பர் மாதத்தில் நடத்திய ஒருங்கிணைந்த பாதுகாப்புச் சேவைகள் தேர்வு (II) 2024-ன் இறுதி முடிவுகளை அறிவித்துள்ளது. இதன்படி, 349 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்திய ராணுவக் கல்விக் கழகத்திற்கு 100 பணியிடங்கள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. இதில் என்சிசி – சி சான்றிதழ் (ராணுவப் பிரிவு) பெற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 13 இடங்கள், இந்திய கடற்படை அகாடமிக்கான  32 பணியிடங்கள், என்சிசி – சி சான்றிதழ் (கடற்படை பிரிவு) பெற்றிருப்பவர்களுக்கான  6 பணியிடங்கள் விமானப்படை அகாடமிக்கான 32 பணியிடங்கள், என்சிசி – சி சான்றிதழ் (விமானப்படை பிரிவு) பெற்றிருப்பவர்களுக்கான 3 பணியிடங்கள் அடங்கும்.

இந்தப் பட்டியலைத் தயாரிப்பதற்கு மருத்துவத் தேர்வு கணக்கில்  கொள்ளப்படவில்லை. மேலும், சம்பந்தப்பட்டவர்களின் பிறந்த தேதி மற்றும் கல்வித் தகுதி, ராணுவ தலைமையகத்தின் பரிசீலனையில்  உள்ளன. பிறந்த தேதி, கல்வித் தகுதி குறித்த அசல் சான்றிதழ்கள் மற்றும் ஒப்பமிட்ட நகல்களை ராணுவத்  தலைமையகம் / கடற்படை தலைமையகம் / விமானப்படைத் தலைமையகம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்குமாறு தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். முகவரியில் ஏதாவது மாற்றம் இருந்தாலும் உடனே தலைமையகங்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்க வேண்டும். இந்தத் தேர்வு முடிவுகளை http://www.upsc.gov.in என்ற மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காணலாம்.

Leave a Reply