நக்சலைட்டுகளின் நடவடிக்கைகள் குறைந்தது!- மத்திய அரசு.

இடதுசாரி தீவிரவாதத்தை முழுமையாக எதிர்கொள்ள, மத்திய அரசு 2015-ம் ஆண்டில் ‘இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்துக்கு’ ஒப்புதல் அளித்தது. இந்தக் கொள்கை, பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள், மேம்பாட்டுத் தலையீடுகள், உள்ளூர் சமூகங்களின் உரிமைகள் மற்றும் உரிமைத் தகுதிகளை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய பல்முனை உத்திகளுக்கு வழிவகுக்கிறது. இக்கொள்கையின் உறுதியான அமலாக்கத்தின் விளைவாகத் தொடர்ந்து வன்முறை செயல்கள் குறைந்தன. இடதுசாரி தீவிரவாதிகளின் வன்முறை சம்பவங்கள் 2010-ம் ஆண்டில் 1936 என்ற அதிகபட்ச எண்ணிக்கையில் இருந்தன. இந்தச் சம்பவங்கள் 2024-ம் ஆண்டில் 374 ஆகக் குறைந்துள்ளது. அதாவது 81 சதவீதம் குறைந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் மொத்த உயிரிழப்புகளின் (பொதுமக்கள் + பாதுகாப்புப் படையினர்) எண்ணிக்கையும் குறைந்தது. 2010-ம் ஆண்டில் 1005 உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், அது 2024-ம் ஆண்டில் 150 ஆக 85 சதவீதம் அளவிற்குக் குறைந்துள்ளது.

கடந்த 06 ஆண்டுகளில், இடதுசாரி தீவிரவாதத்தால் 2019-ம் ஆண்டில் 501 ஆக இருந்த வன்முறை சம்பவங்கள் 2024-ம் ஆண்டில் 374 ஆகக் குறைந்துள்ளது, அதாவது 25 சதவீதம் குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் மொத்த உயிரிழப்புகளின் (பொதுமக்கள் + பாதுகாப்புப் படையினர்) எண்ணிக்கையும் குறைந்துள்ளது. 2019-ம் ஆண்டு 202 உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், 2024-ம் ஆண்டில் 150 என்ற அளவில் 26 சதவீதம் குறைந்துள்ளது.

2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் வன்முறைகள் அதிகரித்ததற்குக் காரணம், சிபிஐ (மாவோயிஸ்ட்)-ன் முக்கிய பகுதிகளில் பாதுகாப்புப் படைகள் நுழையத் தொடங்கியதால் இடதுசாரி தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் அதிகரித்ததே ஆகும்.

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 2018 ஏப்ரல் மாதத்தில் 126 மாவட்டங்களிலிருந்து 90 மாவட்டங்களாகவும், 2021 ஜூலை மாதத்தில் 70 ஆகவும், பின்னர் 2024 ஏப்ரல் மாதத்தில் 38 ஆகவும் குறைந்தன.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணை அமைச்சர் திரு. நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply