மருத்துவ ஆக்ஸிஜன் மேலாண்மை குறித்த தேசிய வழிகாட்டு நெறிமுறைகள் – சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நடைபெற்ற பயிலரங்கில் மருத்துவ ஆக்ஸிஜன் மேலாண்மை குறித்த தேசிய வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத் துறை சார்பில் ஆக்ஸிஜன் மேலாண்மை குறித்த தேசிய திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் திருமதி புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா, மருத்துவ ஆக்ஸிஜன் உள்கட்டமைப்பை முறையாக பராமரித்து பயன்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். இதனால் எந்தவொரு அவசர எழுச்சி சூழலிலும் தேவைக்கு ஏற்ப செயல்பட முடியும் என்று அவர் கூறினார்.. கோவிட்-19 தொற்றுப் பாதிப்பிலிருந்து ஆக்ஸிஜன் மேலாண்மை குறித்து கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

எய்ம்ஸ் இயக்குநர் பேராசிரியர் எம்.ஸ்ரீனிவாஸ் பேசுகையில், திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தை தொடங்குவதில் இந்த நிறுவனத்தின் பங்கை எடுத்துரைத்தார். ஆக்ஸிஜன் மேலாண்மை  தொடர்பாக  சுகாதார சூழலில் அனைத்து நிலைகளிலும் பயிற்சியும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஆக்ஸிஜன் மேலாண்மை குறித்த தேசிய திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டம், புதுதில்லி எய்ம்ஸ் உடன் இணைந்து சுகாதாரத்துறை  அமைச்சகத்தின் பேரிடர் பிரிவில் நடைபெறும் ஒரு முன் முயற்சியாகும். இது நாடு முழுவதும் சுமார் 200 முதன்மை பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் மருத்துவ ஆக்ஸிஜனை முறையாகக் கையாளுதல், பயன்படுத்துதல், வீணாவதைக் குறைத்தல், மருத்துவ விளைவுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.

இந்தப் பயிலரங்கில் சுகாதார அமைச்சகம், எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த அதிகாரிகள், நாடு முழுவதிலும் இருந்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply