கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் மூன்றாம் ஆண்டு நர்சிங் மாணவி ஒருவர் வார்டனின் கொடுமை தாங்காமல் விடுதி அறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, மூன்று மாதா காலம் கோமாவில் இருந்து கடந்த மார்ச் 22 ஆம் தேதி உயிரிழந்ததாக வெளியான ஊடகச் செய்தியின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர் ஆரம்பத்தில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்படுவதற்கு முன்பு மங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறக்கும் வரை ஆபத்தான நிலையில் இருந்தார்.
செய்தி அறிக்கையின் உள்ளடக்கங்கள், உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்ட மாணவியின் மனித உரிமையை மீறிய செயலாக இது எடுத்துக் கொள்ளப்பட்டு கடுமையான பிரச்சினையை எழுப்புவதாக ஆணையம் கருதியது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு கேரள மாநில அரசு தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
23.03.2025 அன்று வெளியான ஊடகச் செய்தியின்படி, பணியிடத்தில் மாணவியை விடுதி நிர்வாகம் துன்புறுத்தியதாக சக மாணவர்கள் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. இறந்தவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது கூட விடுதி காப்பாளரால் மன ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எம்.பிரபாகரன்