மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு சிக்கிம் மாநிலத்தில் பேரிடர் மீட்பு, மறுகட்டுமானப் பணிகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு, சிக்கிம் மாநிலத்திற்கான பேரிடர் மீட்பு மற்றும் மறுகட்டுமானப் பணிகளுக்கான திட்டங்களுக்கும், ஐந்து மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை வலுப்படுத்துவதற்கான திட்டங்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய நிதியமைச்சர், மத்திய வேளாண் அமைச்சர், நித்தி ஆயோக் துணைத் தலைவர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த உயர்நிலைக் குழு, மீட்பு, மறுசீரமைப்பு நிதிக்கான வழிவகையையும் தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் தயார்நிலை பணிகள், திறன் மேம்பாடு போன்ற நடவடிக்கைகளுக்காக மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்குவது குறித்த முன்மொழிவுகளை பரிசீலனை செய்தது.

நாட்டில் நெகிழ்திறனுடன் கூடிய பேரிடர் மேலாண்மைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும் வகையில், உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் பேரில், பேரிடர் சூழலை திறம்பட நிர்வகிப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் பேரிடர் அபாயங்களைக் குறைப்பதற்கான நடைமுறைகளை வலுப்படுத்துவதன் மூலம், பேரிடர் காலங்களில் உயிர் மற்றும் உடைமைகளுக்கு சேதம் ஏற்படாமல் தடுக்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

“மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்துதல், நவீனப்படுத்துதல்” திட்டத்தின் கீழ், பீகார், குஜராத், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான திட்டங்கள் / செயல்பாடுகளுக்கு இந்த உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பீகாருக்கு ரூ.340.90 கோடியும், குஜராத்துக்கு ரூ.339.18 கோடியும், ஜார்க்கண்டுக்கு ரூ.147.97 கோடியும், கேரளாவுக்கு ரூ.162.25 கோடியும், மகாராஷ்டிராவுக்கு ரூ.614.09 கோடியும் தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்ய இந்தக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. “மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்குவதற்காக” தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் மொத்தம் ரூ.5,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மொத்தம் ரூ.3,373.12 கோடி மதிப்பீட்டில் 20 மாநிலங்களின் முன்மொழிவுகளுக்கு மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில், மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 28 மாநிலங்களுக்கு ரூ.19,074.80 கோடியும், மாநில பேரிடர் தணிப்பு நிதியின் கீழ் 16 மாநிலங்களுக்கு ரூ.3,229.35 கோடியும் மத்திய அரசு விடுவித்துள்ளது. மேலும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 19 மாநிலங்களுக்கு ரூ.5,160.76 கோடியும், தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் கீழ் 08 மாநிலங்களுக்கு ரூ.719.71 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply