ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு வேலை வாய்ப்புகள்.

தற்போதுள்ள விதிகளின்படி, நாட்டில் உள்ள முன்னாள்  ராணுவ வீரர்களுக்கு போதுமான ஓய்வூதியம் மற்றும் வேலை வாய்ப்புகளை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், ஒரு பதவி ஒரு ஓய்வூதியத் திட்டம், ஒரே கால சேவையுடன் ஓய்வு பெறும் முன்னாள் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய விகிதங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்தல் உள்ளிட்டவற்றையும் செயல்படுத்தி வருகிறது.

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், மத்திய துணை ராணுவப்படை போன்ற துறைகளில் வேலைவாய்ப்பின் அடிப்படையில் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள், வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கு அரசு நிதியுதவி செய்து வருகிறது.

மேலும், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் குரூப் ‘சி’ பதவிகளில் 14.5 சதவீதமும், குரூப் ‘டி’ பதவிகளில் 24.5 சதவீதமும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் படைவீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் ஊனமுற்ற முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பணியில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் 4.5% பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்திய ராணுவத்தின் அலுவலர் தேர்வில் முன்னாள் ராணுவத்தினரின் விதவைகள், போரில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் ஆகியோருக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், பணியிலிருக்கும் போது உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த விதவைப் பெண்களுக்கு, பெண்கள் சேவை ஆணையத்தில் 5 சதவீத வேலை வழங்கப்படுகிறது. முன்னாள்  ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அக்னிபத் திட்டம் மற்றும் நிரந்தர பணியாளர் தேர்வுக்கான ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வில் போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

ராணுவப் பணியில் இருக்கும்போது மரணமடையும் வீரர்களின் குடும்பத்தினருக்கு சிறப்பு குடும்ப ஓய்வூதியம் அல்லது தளர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியம் உரிய முறையில் வழங்கப்படுகிறது. மேலும், கருணைத் தொகை, பணிக்கொடை ஆகியவையும் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் கேள்வி ஒன்றுக்கு அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply