உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுப்பதற்கு மத்தியஸ்தம் மற்றும் சமரச வழிமுறைகள் மிகவும் முக்கியமானவை என்று தில்லியில் இன்று நடைபெற்ற ஐக்கிய சர்வதேச மத்தியஸ்தர் மாநாட்டின் சிறப்பு முழுமையான அமர்வில் உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்தார். அவர் தனது உரையில், இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதில் வலுவான சட்டம் மற்றும் நடுவர் கட்டமைப்பின் முக்கியத்துவத்தையும், உலகளாவிய உற்பத்தி மையமாக மாறுவதற்கான அதன் லட்சியத்தையும் விளக்கினார்.
நீதித்துறை தாமதங்களைக் குறைப்பதிலும், நிலையான மற்றும் வெளிப்படையான வணிகச் சூழலை உறுதி செய்வதிலும் மத்தியஸ்தம் மற்றும் சமரசம் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று திரு கோயல் குறிப்பிட்டார். மத்தியஸ்த வழிமுறைகளில் நம்பிக்கையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், பெரிய நிறுவனங்களின் செல்வாக்கு மற்றும் சர்வதேச சார்புகள் குறித்த கவலைகளை ஒப்புக் கொண்டார். இந்தியாவில் சமரச நடைமுறைகளை மேலும் திறமையானதாகவும், பாரபட்சமற்றதாகவும் மாற்ற சம்பந்தப்பட்டவர்களை அமைச்சர் வலியுறுத்தினார், இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு மிகவும் நட்பான சூழலை வளர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவின் வளர்ச்சிப் பாதையைப் பிரதிபலிக்கும் வகையில், நாட்டின் வலுவான பொருளாதார செயல்திறனை எடுத்துரைத்த திரு கோயல், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரம் என்றும், 2025-26 ஆம் ஆண்டில் நான்காவது பெரிய உலகளாவிய பொருளாதாரமாக மாறும் பாதையில் உள்ளது என்றும் கூறினார். வணிக விதிமுறைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் ஜன் விஸ்வாஸ் சட்டத்தின் மூலம் 180 க்கும் மேற்பட்ட சட்ட விதிகளை நீக்குதல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க கொள்கை சீர்திருத்தங்களே இந்த முன்னேற்றத்திற்கு காரணம் என்று அவர் கூறினார். இந்த சீர்திருத்தங்கள் நம்பகமான முதலீட்டு இடமாக இந்தியா மீது சர்வதேச நம்பிக்கையை உருவாக்கியுள்ளன என்று அமைச்சர் கூறினார்.
அரசுக்கும் மக்களுக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கும் நோக்கத்துடன் ஜன் விஸ்வாஸ் பெயரிடப்பட்டது என்று அவர் விளக்கினார். அரசு அவர்களை நம்புகிறது என்றும், கடுமையான சட்ட விளைவுகளுடன் சிறிய தவறுகளுக்கு அபராதம் விதிக்க முயற்சிக்காது என்றும் மக்களுக்கு உறுதியளிப்பதே இதன் நோக்கம். அதற்கு பதிலாக, செயல்முறைகளை எளிமைப்படுத்துவதிலும், நீண்ட நீதித்துறை ஆய்வுக்கு பதிலாக நியாயமான நடவடிக்கைகள் மூலம் பிழைகளை சரிசெய்ய முடியும் என்பதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
சட்ட சிக்கல்களை மேலும் குறைக்கும் நோக்கில் ஜன் விஸ்வாஸ் 2.0 குறித்து அரசு இப்போது செயல்பட்டு வருவதாகவும் திரு கோயல் கூறினார். உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியாவின் நன்மைகள் குறித்து விவாதித்த திரு கோயல், இளம் பணியாளர்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் உற்பத்தி போட்டித்தன்மையை மேம்படுத்தும் பரந்த உள்நாட்டு சந்தை போன்ற முக்கிய காரணிகளைச் சுட்டிக்காட்டினார். விரிவான 5ஜி இணைப்புடன் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தையும் அமைச்சர் எடுத்துரைத்தார், இது நாடு முழுவதும் வணிக நடவடிக்கைகளை எளிதாக்குகிறது என்று அவர் கூறினார்.
தற்போது நடைபெற்று வரும் சட்ட சீர்திருத்தங்கள் குறித்து உரையாற்றிய திரு கோயல், உலகின் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப இந்தியாவின் நீதித்துறை மற்றும் நடுவர் அமைப்புகளை நவீனப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் சர்வதேச தரத்திலான சட்டங்கள் மூலம் நடுவர் தீர்ப்பாய செயல்திறனை மேம்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்..
திவாஹர்