‘சுற்றுச்சூழல் – 2025’ குறித்த தேசிய மாநாட்டை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்.

‘சுற்றுச்சூழல் – 2025’ குறித்த இரண்டு நாள் தேசிய மாநாட்டை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு புதுதில்லியில் இன்று (மார்ச் 29, 2025) தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்து நாட்களும், அவற்றின் நோக்கங்களையும், திட்டங்களையும் ஒவ்வொரு நாளும் மனதில் கொண்டு, முடிந்தவரை அவற்றை நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற செய்தியை அளிக்கின்றன என்று கூறினார். விழிப்புணர்வு மற்றும் அனைவரின் பங்களிப்பின் அடிப்படையிலான தொடர்ச்சியான செயல்பாட்டின் மூலமே சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மேம்பாடும் சாத்தியமாகும்.

நமது குழந்தைகளும், இளைய தலைமுறையினரும் சுற்றுச்சூழல் மாற்றத்தை பரந்த அளவில் எதிர்கொண்டு பங்களிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெரியவர்கள் தங்கள் குழந்தைகள் எந்தப் பள்ளி அல்லது கல்லூரியில் படிப்பார்கள், அவர்கள் என்ன தொழிலைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து கவலைப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.  இந்தக் கவலை நியாயமானதுதான். ஆனால், நாமனைவரும் கூட நமது குழந்தைகள் எந்த வகையான காற்றைச் சுவாசிப்பார்கள், அவர்களுக்கு குடிக்க எந்த வகையான தண்ணீர் கிடைக்கும், பறவைகளின் இனிமையான ஒலிகளை அவர்களால் கேட்க முடிகிறதா, முடியாதா, பசுமையான காடுகளின் அழகை அவர்களால் அனுபவிக்க முடியுமா இல்லையா என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். இந்த தலைப்புகள் பொருளாதார, சமூக மற்றும் அறிவியல் அம்சங்களைக் கொண்டுள்ளன, ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த அனைத்து தலைப்புகள் தொடர்பான சவால்களும் ஒரு தார்மீக அம்சத்தைக் கொண்டுள்ளன. வரும் தலைமுறையினருக்கு தூய்மையான சுற்றுச்சூழலை பாரம்பரியமாக வழங்குவது நமது தார்மீகப் பொறுப்பாகும். இதற்காக, நாம் சுற்றுச்சூழல் உணர்வு மற்றும் உணர்திறன் வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும், இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் மட்டுமல்லாமல் மேம்படுத்தப்படுவதோடு, சுற்றுச்சூழலை மேலும் துடிப்பானதாக மாற்ற முடியும். தூய்மையான சுற்றுச்சூழலையும், நவீன வளர்ச்சியையும் சமநிலைப்படுத்துவது ஒரு வாய்ப்பாகவும் சவாலாகவும் உள்ளது என்று அவர் கூறினார்.

ஒரு தாயைப் போல இயற்கை நமக்கு ஊட்டமளிக்கிறது என்று நாம் நம்புவதாகவும், நாம் இயற்கையை மதித்து பாதுகாக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டார்.  இந்திய பாரம்பரிய வளர்ச்சியின் அடிப்படை ஊட்டம், சுரண்டல் அல்ல; பாதுகாப்பு, நீக்குதல் அல்ல. இந்தப் பாரம்பரியத்தைப் பின்பற்றி, வளர்ந்த இந்தியாவை நோக்கி முன்னேற விரும்புகிறோம். கடந்த பத்தாண்டுகளில் சர்வதேச ஒப்பந்தங்களின்படி தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பை விரைந்து முடிப்பதில் இந்தியா பல உதாரணங்களை சாதித்துள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

நமது நாட்டின் சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய பங்காற்றியுள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். சுற்றுச்சூழல் நீதி அல்லது பருவநிலை நீதித் துறையில் இது ஒரு தீர்க்கமான பங்கைக் கொண்டுள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய வரலாற்று முடிவுகள் நம் வாழ்க்கை, நமது ஆரோக்கியம் மற்றும் நமது பூமியின் எதிர்காலம் ஆகியவற்றில் பரந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நமது நாடும், ஒட்டுமொத்த உலக சமுதாயமும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பாதையைப் பின்பற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். அப்போதுதான் மனிதகுலம் உண்மையான முன்னேற்றத்தை அடையும். இந்தியா தனது பசுமை முயற்சிகள் மூலம் உலக சமூகத்திற்கு பல முன்மாதிரியான உதாரணங்களை வழங்கியுள்ளது என்று அவர் கூறினார். அனைத்து பங்குதாரர்களின் பங்களிப்புடன், உலக அளவில் பசுமை தலைமையின் பங்கை இந்தியா வகிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் காற்று, நீர், பசுமை மற்றும் வளம் ஆகியவை ஒட்டுமொத்த உலக சமுதாயத்தையும் ஈர்க்கும் வகையில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘சுற்றுச்சூழல் – 2025’ குறித்த தேசிய மாநாடு, அழுத்தமான சுற்றுச்சூழல் சவால்களைப் பற்றி விவாதிக்கவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், நிலையான சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான எதிர்கால செயல் திட்டங்களில் ஒத்துழைக்கவும் முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது..

Leave a Reply