பீகார் மாநிலம் பாட்னாவில் ₹ 800 கோடி மதிப்பிலான பல்வேறு மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா இன்று தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பீகார் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார், மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அமித் ஷா தமது உரையில், கூட்டுறவுத் துறை, பிற துறைகள் தொடர்பான பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றார். கடந்த 10 ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழை மக்களின் நலனுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்று அவர் எடுத்துரைத்தார். முந்தைய எதிர்க்கட்சி அரசுகள் ஏழைகளை புறக்கணித்ததாக திரு அமித் ஷா விமர்சித்தார், அதே நேரத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வீட்டுவசதி, மின்சாரம், எரிவாயு, குடிநீர், கழிப்பறைகள், மருந்துகள், இலவச உணவு தானியங்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய ஏற்பாடு செய்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் திரு நரேந்திர மோடி கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கினார் திரு அமித் ஷா கூறினார். பல ஆண்டுகளாக, எந்தவொரு அரசும் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். ஏராளமான நிலம், நீர் மற்றும் இயற்கை வளங்களைக் கொண்ட பீகார், வரும் ஆண்டுகளில் கூட்டுறவுத் துறையால் குறிப்பிடத்தக்க அளவு பயனடையும் என்று திரு அமித் ஷா கூறினார்.
தொடக்க வேளாண் கடன் சங்கங்களை வலுப்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். பீகாரில் மக்கானா வாரியம் நிறுவப்பட்டுள்ளதை எடுத்துரைத்த அவர், மக்காச்சோள விவசாயிகளுக்கு ஆதரவளிக்க பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்துவதுடன், ₹ 1,000 கோடி முதலீட்டில் மக்காச்சோள ஆராய்ச்சி மையத்தை புதுப்பிக்கும் திட்டத்தை அறிவித்தார். மாநிலத்தில் மூடப்பட்ட 30 சர்க்கரை ஆலைகளை முழு அர்ப்பணிப்புடனும் முயற்சியுடனும் புதுப்பித்து திறக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் உறுதியளித்தார்.
1990 – 2005 க்கு இடையில், எதிர்க்கட்சி அரசுகள் பீகாரில் கொலை, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொள்ளை போன்றவற்றை கட்டுப்படுத்தவில்லை எனவும், இது மாநிலத்தை முற்றிலுமாக அழித்தது என்றும் அவர் குறிப்பிட்டார். பீகாரில் எதிர்க்கட்சி அரசுகளின் ஆட்சியின் போது, சாதிய படுகொலைகள், அரசு ஆதரவிலான ஊழல், தீவன ஊழல் போன்றவை காரணமாக மாநிலம் மோசமான பெயரை எடுத்தது என்று திரு அமித் ஷா கூறினார்.
பீகாரில் திரு நிதிஷ் குமார் அரசின் 10 ஆண்டு கால ஆட்சியில், சாலைகள், மின்சாரம், குழாய் நீர் ஆகியவை ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைந்துள்ளன என்று திரு அமித் ஷா கூறினார். பீகாரில் உள்ள ஏழைகளின் நலனுக்காக வீடுகள், கழிப்பறைகள், தண்ணீர், மருந்துகள், ரேஷன் பொருட்கள் ஆகியவற்றை வழங்கி பிரதமர் திரு நரேந்திர மோடி பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு பதவிக்காலத்தில் பீகாருக்கு ₹ 2.8 லட்சம் கோடி வழங்கப்பட்டது எனவும் பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டுகளில் பீகாருக்கு ₹ 9.23 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் திரு அமித் ஷா குறிப்பிட்டார்.
எஸ்.சதிஸ் சர்மா