மயிலாடுதுறை மாவட்டம் கம்பர்மேட்டில் கம்பராமாயண விழா இன்று தொடங்கியது. இந்நிகழ்வை தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். இது ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், 18.03.25 அன்று கம்பரை போற்றும் விதமாக விழா நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி மத்திய அரசின் பண்பாட்டுப் பிரிவின் கீழ் செயல்படும், இந்தியத் தொல்லியல் துறையின் திருச்சி வட்டம் சார்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கம்பர் பிறந்த ஊராக கருதப்படும் தேரழுந்தூர் என்னும் கிராமத்திலுள்ள கம்பர்மேடு என்னும் இடத்தில் கம்பராமாயண விழாவை 30.03.25 முதல் 06.04.25 வரை பல நிகழ்வுகள் மூலம் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியானது பொதுமக்கள் மற்றும் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கம்பராமாயணத்தின் முக்கியத்துவத்தையும் அதன் பாரம்பரியத்தையும் உணர்த்தும் நோக்கில் அமையும்.
இந்த நிகழ்வை தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர். என். ரவி, இன்று (30.03.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கம்பராமாயணத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
12-ம் நூற்றாண்டில் சோழர் ஆட்சிக் காலத்தில் புகழ்மிக்க புலவர்களில் ஒருவராகக் கம்பர் திகழ்ந்தார். அவர் ஸ்ரீரங்கத்தில் அறிஞர்களின் சபையில் கம்பராமாயணத்தை அரங்கேற்றினார். மேலும் அவரின் படைப்பினைப் புகழாத அறிஞர்களே இல்லை என கூறும் அளவிற்கு அவரின் படைப்பு திகழ்கின்றது. அவர் இயற்றிய இராமாயாணக்கதைகள் சோழர் காலக் கோயில்களில் சிற்பங்களாகவும், ஒவியங்களாகவும் சித்தரிக்கபட்டுள்ளன. இவை தமிழர்கள் இராமாயணத்திற்கு அளித்த முக்கியத்துவத்தை பிரதிபலிக்கின்றன.
இந்தியத் தொல்லியல் துறை மற்றும் தஞ்சாவூரில் உள்ள தென்னகப் பண்பாட்டு மையம் இணைந்து ஒரு வார விழாவாக கொண்டாடப்படும் இந்நிகழ்வானது “கம்பனின் பார்வையில் ராமாயண சிற்பக் காட்சி” என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியுடன் கம்பர்மேடு தொல்லியல் இடத்தில் நடைபெறுகிறது. இக்கண்காட்சியானது தென் இந்தியாவில் ராமாயண பாரம்பரியத்தை உணர்த்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்விழாவில் மக்களுக்காக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுடன், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எம்.பிரபாகரன்