எல்லைப்புற சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ) 32 நாட்களில் ஜோஜிலா கணவாயைத் திறந்து சாதனை படைத்துள்ளது. இன்று (01 ஏப்ரல் 2025) எல்லைப்புற சாலைகள் அமைப்பின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ரகு சீனிவாசன், லடாக் நோக்கி முதல் வாகன அணியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காஷ்மீர் பள்ளத்தாக்கை லடாக்குடன் இணைக்கும் உலகின் மிக முக்கியமான மற்றும் சவாலான உயரமான கணவாய்களில் ஜோஜிலா கணவாய் ஒன்றாகும்.
இந்த ஆண்டு, பிப்ரவரி 27 முதல் மார்ச் 16 வரை 17 நாட்களுக்கு இடைவிடாத பனிப்பொழிவு காரணமாக கணவாய் வழக்கத்திற்கு மாறாக குறுகிய காலத்திற்கு மூடப்பட்டது. பனிக்குவியல் கடுமையான சவாலாக அமைந்தது. பி.ஆர்.ஓ பணியாளர்கள், பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலை, அதிவேக காற்று மற்றும் பனிச்சரிவு பாதிப்புகளுக்கு இடையே போராடி மார்ச் 17 முதல் மார்ச் 31 வரை 15 நாட்களில் பனியை அகற்றினர்.
ஒவ்வொரு ஆண்டும், இந்தக் கணவாய் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படுகிறது. கடுமையான குளிர்கால மாதங்களில் அது மூடப்படுவதை கட்டாயமாக்குகிறது. இந்த தற்காலிக மூடல், துருப்புக்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் இயக்கத்தைபா பாதிப்பது மட்டுமல்லாமல், வர்த்தகம், மருத்துவ உதவி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இந்த வழியை நம்பியிருக்கும் லடாக்கில் உள்ள உள்ளூர் மக்களின் அன்றாட வாழ்க்கையையும் சீர்குலைக்கிறது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மேம்பட்ட பனி அகற்றும் நுட்பங்கள் மற்றும் பி.ஆர்.ஓவின் இடைவிடாத முயற்சிகள் காரணமாக, இந்த மூடல் காலம் சில தசாப்தங்களுக்கு முன்பு சுமார் ஆறு மாதங்களிலிருந்து இப்போது சில வாரங்களாக வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
திவாஹர்