சைபர் குற்றம் தொடர்பான விவகாரங்கள் அனைத்தும் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ளன. இணைய தள மோசடிகளுக்கு தொலைத்தொடர்பு கருவிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க தொலைத் தொடர்புத் துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின்படி ‘காவல்’ மற்றும் ‘பொது ஒழுங்கு’ ஆகியவை மாநில அரசின் துறைகள் ஆகும். இணைய வழி குற்றங்களைக் கையாள்வதற்கான சட்ட அமலாக்க முகமைகளுக்கு ஒரு கட்டமைப்பு மற்றும் சூழல் அமைப்பை வழங்குவதற்காக ஒருங்கிணைக்கப்பட்ட அலுவலகமாக இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தை (I4 சி) உள்துறை அமைச்சகம் நிறுவியுள்ளது. அனைத்து வகையான இணைய தள குற்றங்களையும் பொதுமக்கள் புகாரளிக்க உதவும் வகையில் தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டல் – என்.சி.ஆர்.பி (https://cybercrime.gov.in) என்பதையும் உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. I4சி-ன் படி, 2024-ம் ஆண்டு தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் தளத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த புகார்களின் எண்ணிக்கை 19.18 லட்சம் ஆகும். இழந்த தொகை ரூ.22811.95 கோடி ஆகும். மேலும், தொலைத் தொடர்புத் துறை மற்றும் தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்கள் இந்தியாவிலிருந்து வருவதாகத் தோன்றும் வகையில் இந்திய மொபைல் எண்களைக் காண்பித்து அழைக்கப்படும் சர்வதேச ஏமாற்று அழைப்புகளை அடையாளம் கண்டறிந்து தடுக்கும் ஒரு முறையை வகுத்துள்ளனர்.
தொலைதொடர்பு மோசடிகள் மற்றும் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை இத்துறை ஏற்படுத்தி வருதோடு சஞ்சார் சாத்தி செயலி/போர்ட்டலைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது.
இத்தகவலை மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சி இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் தெரிவித்தார்.
திவாஹர்