புதுதில்லியில் 2025 ஏப்ரல் 01 முதல் 4-ம் தேதி வரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உயர்மட்ட நிகழ்வான ராணுவத் தளபதிகள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வின் போது, இந்திய ராணுவத்தின் உயர்மட்ட தலைமை அதிகாரிகள் தற்போதுள்ள பாதுகாப்பு தொடர்பான அனைத்து அம்சங்கள், எல்லைகளில் உள்ள நிலைமை, உள்நாட்டில் நிலைமை மற்றும் தற்போதைய பாதுகாப்பு சவால்கள் குறித்து விரிவாக விவாதித்தனர். மேலும், நிறுவன மறுசீரமைப்பு, தளவாடங்கள், நிர்வாகம், மனிதவள மேலாண்மை, உள்நாட்டுமயமாக்கல் மூலம் நவீனமயமாக்கல், முக்கிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் தற்போதுள்ள பல்வேறு உலகளாவிய சூழ்நிலைகளின் தாக்கத்தை மதிப்பீடு செய்தல் முதலான பிரச்சனைகளிலும் இந்த மாநாடு கவனம் செலுத்தியது. மாநாட்டின் மூன்றாவது நாளின் சிறப்பம்சமாக பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், இந்திய ராணுவத்தின் உயர் தலைவர்களிடையே உரையாற்றினார். அதற்கு முன்னதாக “சீர்திருத்தங்களின் ஆண்டு” என்ற தலைப்பு குறித்த சுருக்கமான விளக்கம் அளிக்கப்பட்டது.
நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் எழுச்சியூட்டும் அமைப்புகளில் ஒன்றாக விளங்கும் இந்திய ராணுவத்தின் மீது கோடிக்கணக்கான குடிமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பாதுகாப்பு அமைச்சர் மீண்டும் தனது உரையில் உறுதிப்படுத்தினார். நமது எல்லைகளைப் பாதுகாப்பதிலும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும் ராணுவம் ஆற்றிய பாராட்டத்தக்க பங்கை அவர் எடுத்துரைத்தார். பாதுகாப்பு, மனிதநேய உதவி மற்றும் பேரிடர் மீட்பு, மருத்துவ உதவி முதல் நாட்டின் நிலையான உள்நாட்டு நிலைமையை பராமரிப்பது வரை ஒவ்வொரு களத்திலும் ராணுவம் உள்ளது. நாட்டின் கட்டமைப்பிலும், ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் இந்திய ராணுவத்தின் பங்கு ஒப்பிட முடியாதது. ராணுவத் தளபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டதில் தனது மகிழ்ச்சியை மீண்டும் குறிப்பிட்ட அமைச்சர், நாட்டின் பாதுகாப்பு தொலைநோக்கை புதிய உச்சத்திற்கு வெற்றிகரமாக கொண்டு சென்றதற்காக ராணுவத் தலைமையைப் பாராட்டினார். அதிநவீன தொழில்நுட்பத்தை உட்செலுத்துதல் மற்றும் உள்வாங்குதல் ஆகியவற்றில் இந்திய ராணுவத்தின் அணுகுமுறையையும் அவர் பாராட்டினார்.
திவாஹர்