தாய்லாந்துக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, தாய்லாந்து பிரதமர் மேதகு திரு பத்ரோடன் ஷினவத்ராவை இன்று பாங்காக் நகரில் சந்தித்தார். அரசு இல்லம் சென்றடைந்த பிரதமரை திரு ஷினவத்ரா வரவேற்று சம்பிரதாய முறைப்படி வரவேற்றார். இது அவர்களின் இரண்டாவது சந்திப்பாகும். முன்னதாக, 2024 அக்டோபரில் வியன்டியானில் நடைபெற்ற ஆசியான் தொடர்பான உச்சிமாநாட்டின் போது இரு தலைவர்களும் சந்தித்தனர்.
இந்தியா மற்றும் தாய்லாந்து இடையேயான ஒட்டுமொத்த இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். அரசியல் பரிமாற்றங்கள், ராணுவம் மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மை, உத்திசார் ஈடுபாடு, வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். அவ்வாறு செய்யும்போது, இணைப்பு, சுகாதாரம், அறிவியல் & தொழில்நுட்பம், புதிய தொழில்கள், கண்டுபிடிப்புகள், டிஜிட்டல், கல்வி, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ஒத்துழைப்புகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டினர். ஆள்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சைபர் மோசடிகள் உள்ளிட்ட நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். பிம்ஸ்டெக், ஆசியான் மற்றும் மேகாங் கங்கா ஒத்துழைப்பு உள்ளிட்ட துணை பிராந்திய, பிராந்திய மற்றும் பலதரப்பு அமைப்புகளில் நெருக்கமான ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வழிகள் உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இரு பிரதமர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்திய-தாய்லாந்து உத்திசார் கூட்டாண்மையை உருவாக்குவது குறித்த கூட்டுப் பிரகடனத்தை இரு தலைவர்களும் பரிமாறிக் கொண்டனர். கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள்; டிஜிட்டல் தொழில்நுட்பங்கள்; குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்; மற்றும் கடல்சார் பாரம்பரியம் தொடர்பான துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்திய-தாய்லாந்து தூதரக பேச்சுவார்த்தை ஏற்படுத்தப்பட்டதை இரு தலைவர்களும் வரவேற்றனர். இது இரு நாட்டு மக்களுக்கு இடையேயான தொடர்புகளை மேலும் எளிதாக்கும்.
நல்லெண்ண நடவடிக்கையாக, பிரதமர் திரு மோடியின் வருகையைக் குறிக்கும் வகையில், தாய்லாந்து அரசு, 18 ஆம் நூற்றாண்டின் ராமாயண சுவரோவியங்களை சித்தரிக்கும் சிறப்பு தபால் தலையை வெளியிட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான நெருங்கிய கலாச்சார மற்றும் மதம் சார்ந்த தொடர்புகளை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், பாலி மொழியில் உள்ள புத்தமத புனித நூல்களான டி-பிடகாவின் சிறப்பு பதிப்பை திரு ஷினவத்ரா பிரதமருக்கு வழங்கினார். இந்தியா மற்றும் தாய்லாந்து இடையேயான நெருங்கிய நாகரீக உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் வகையில் குஜராத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட புத்தரின் நினைவுச் சின்னங்களை தாய்லாந்துக்கு பொதுமக்கள் மரியாதை செலுத்துவதற்காக அனுப்பி வைக்க பிரதமர் முன்வந்தார். கடந்த ஆண்டு, புத்தர் மற்றும் அவரது இரண்டு சீடர்களின் புனித நினைவுச்சின்னங்கள் இந்தியாவில் இருந்து தாய்லாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மேலும் 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவும் தாய்லாந்தும் ராமாயணம் மற்றும் புத்த மதம் உள்ளிட்ட கலாச்சாரம், மொழி மற்றும் மத உறவுகளால் ஆதரிக்கப்பட்ட பகிரப்பட்ட நாகரிக பிணைப்புகளைக் கொண்ட கடல்சார் அண்டை நாடுகளாகும். தாய்லாந்துடனான இந்தியாவின் உறவுகள், நமது கிழக்கு நோக்கிய கொள்கை, ஆசியான் உடனான விரிவான ராஜதந்திர கூட்டாண்மை, தொலைநோக்கு மகாசாகர் மற்றும் இந்தோ-பசிபிக் தொலைநோக்கு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தூணாக உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயான நீடித்த கலந்துரையாடல்கள், பழமையான உறவுகள் மற்றும் பகிரப்பட்ட நலன்களின் அடிப்படையில் வலுவான மற்றும் பன்முக உறவுக்கு வழிவகுத்துள்ளது.
திவாஹர்