கார்வாரில் நடைபெற்ற 2025-ம் ஆண்டுக்கான முதலாவது கடற்படை தளபதிகள் மாநாட்டின் முதல் கட்டத்தில் கடல்சார் பாதுகாப்பு சூழல் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்.

2025 ஏப்ரல் 5 அன்று கர்நாடக மாநிலம் கார்வாரில் நடைபெற்ற 2025-ம் ஆண்டுக்கான முதலாவது கடற்படை தளபதிகள் மாநாட்டின் தொடக்க கட்டத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், கடல்சார் பாதுகாப்பு நிலைமை, இந்திய கடற்படையின் செயல்பாட்டு தயார்நிலை, எதிர்கால திட்டங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அவருடன் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான், கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், பிற மூத்த அதிகாரிகள் இருந்தனர்.

தளபதிகளிடையே உரையாற்றிய திரு ராஜ்நாத் சிங், இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதிலும், புதிய ஆற்றலுடன் தேசத்திற்குச் சேவை செய்வதில் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதிலும் கடற்படையின் பங்களிப்பைப் பாராட்டினார்.

தற்போதைய கணிக்க முடியாத புவிசார் அரசியல் சூழலுக்கு மத்தியில் ஆயுதப்படைகளின் எதிர்கால செயல்பாடுகளை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்று பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார். 21-ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்றும், இந்தியா அதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்கும் என்றும் உலகளாவிய நிபுணர்கள் கூறுவதை அவர் குறிப்பிட்டடார். இந்தோ-பசிபிக் பிராந்தியம் உலகின் மைய புள்ளியாக மாறியுள்ளதால் அமைதியையும் செழிப்பையும் உறுதி செய்வது நமது பொறுப்பு என்று அவர் கூறினார்.

பாதுகாப்பு அமைச்சகத்தில் 2025-ம் ஆண்டு சீர்திருத்த ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சீர்திருத்தங்கள் குறித்த உறுதிப்பாட்டை நிறைவேற்ற அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று திரு ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.

மாநாட்டின் இரண்டாம் கட்டம் 2025 ஏப்ரல் 07 முதல் 10 வரை புதுதில்லியில் நடைபெறும். முக்கிய செயல்பாடுகள், யதளவாடங்கள், மனிதவள மேம்பாடு, பயிற்சி, நிர்வாக அம்சங்கள் ஆகியவை குறித்து இதிர் விரிவான மதிப்பாய்வு செய்யப்படும்.

Leave a Reply