குஜராத்தின் காந்திநகரில் இஃப்கோ-வின் கலோல் கிளையின் பொன்விழா கொண்டாட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு.

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (இஃப்கோ) நிறுவனத்தின் கலோல் கிளையின் பொன்விழா கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று (06.04.2025) கலந்து கொண்டு விதை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (பீஜ் அனுசந்தன் கேந்திரா) அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உட்பட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தனது உரையில், கூட்டுறவு, கார்ப்பரேட் மதிப்புகள் ஒன்றிணைந்து செயல்படும்போது முடிவுகள் சிறப்பாக அடையப்படுகின்றன என்பதை இஃப்கோவின் 50 ஆண்டுகால புகழ்பெற்ற பயணம் நிரூபிக்கிறது என்று அவர் கூறினார். ஆராய்ச்சி, மேம்பாடு, சந்தைப்படுத்துதல், பிராண்டிங் மற்றும் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைதல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் இஃப்கோ திறம்பட கையாண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

உணவு தானியத் துறையில் இந்தியா இப்போது தன்னிறைவு அடைந்துள்ளது என்றும், இந்த சாதனையில் இஃப்கோ குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது என்றும் திரு அமித் ஷா கூறினார்.

இஃப்கோ பல்வேறு வகையான ஆராய்ச்சி – மேம்பாட்டு பணிகளையும் மேற்கொண்டுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். இஃப்கோவின் கலோல் தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டு விழா நடந்தபோது, அது அந்த நேரத்தில் ஒரு பெரிய புரட்சியாக கருதப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். காலப்போக்கில், இஃப்கோ நானோ யூரியா, நானோ டிஏபி, நானோ திரவம், யூரியா, திரவ டிஏபி போன்ற பகுதிகளில் ஆராய்ச்சி – சோதனயை நடத்தி உற்பத்தியை அதிகரித்தது என அவர் கூறினார்.

நானோ யூரியா, நானோ டிஏபி துறையில் இந்தியாவின் கூட்டுறவுத் துறையை உலகளவில் முக்கியத்துவமுடையதாக இஃப்கோ ஆக்கியுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். இஃப்கோவின் நானோ யூரியா, நானோ டிஏபி ஆகியவை இப்போது உலகம் முழுவதும் சென்றடைகின்றன என்றும் அவர் கூறினார்.

50 ஆண்டுகளுக்கு முன்பு இஃப்கோ நிறுவப்பட்டபோது, அது இந்த நிலையை எட்டும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று திரு அமித் ஷா மேலும் குறிப்பிட்டார். அதேபோல், இன்று விதை ஆராய்ச்சி மையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், நமது விவசாயிகளின் வளத்தை மேம்படுத்துவதில் இந்த மையம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் என்று அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார்.

Leave a Reply