பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள பழங்குடியின சமூகங்களின் முழுமையான வளர்ச்சிக்கு உறுதிபூண்டுள்ளது . இந்த தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, சுகாதார இடைவெளிகளை நிரப்பவும், பழங்குடியின மக்களுக்கு, குறிப்பாக தொலைதூர பகுதிகளில் உள்ள மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் அமைச்சகம் பல ஆக்கப்பூர்வமான சுகாதார முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
தேசிய அரிவாள் செல் ரத்த சோகை ஒழிப்பு இயக்கம், பிரதமர் திரு நரேந்திர மோடியால் ஜூலை 2023-ல் தொடங்கப்பட்டது . இந்த இயக்கம் 2047-ம் ஆண்டளவில் அரிவாள் செல் நோயை ஒழிக்க ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது.
பழங்குடியின கௌரவ ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம், தில்லி எய்ம்ஸ், ஒடிசா அரசு ஆகியவற்றுடன் இணைந்து, ஒடிசாவின் சுந்தர்கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2025 ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் மெகா மருத்துவ முகாமை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த முகாமை மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு ஜூவல் ஓரம் 5 ஏப்ரல் 2025 அன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் தமது உரையில், பழங்குடியின சமூகங்களுக்கான சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்தார் . ஒடிசாவில் உள்ள பழங்குடியின மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் தில்லி எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் குழுவினரின் முயற்சிகளை அவர் பாராட்டினார். முதல் நாளில், 1,500 க்கும் மேற்பட்ட நோயாளிகள் இந்த சேவைகளைப் பெற்றனர். இந்த முகாம் இன்றும் (ஏப்ரல் 6, 2025) தொடர்ந்து நடைபெறுகிறது.
திவாஹர்