ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இன்று 6000க்கும் அதிகமான யோகா ஆர்வலர்கள் யோகா பயிற்சி செய்தனர். தொடக்க நிகழ்வுகளில் ஒன்றான ‘ஹரித் யோகா’வை மத்திய ஆயுஷ் இணையமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ் மற்றும் பிற பிரமுகர்களுடன் இணைந்து மருந்துச் செடிகளை நட்டு தொடங்கி வைத்தார். அனைத்து யோகா ஆர்வலர்களுக்கும் மருந்துச் செடிகள் விநியோகிக்கப்பட்டன.
கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர், “கடந்த 10 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு யோகா பிரபலமடைந்துள்ளது. இப்போது அது ஓர் உலகளாவிய நிகழ்வாக மாறிவிட்டது. 2025, மார்ச் 30, அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மனதின் குரல் உரையில் அன்றாட வாழ்வில் உடல் தகுதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சர்வதேச யோகா தினம் போன்ற முயற்சிகளைப் பாராட்டி உள்ளார. உலகில் ஆரோக்கியமான மக்களுக்கு இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொண்ட பிரதமர், 2025 ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளை ‘ஒரு பூமி ஒரு ஆரோக்கியத்திற்கு யோகா’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருப்பொருள் முழு உலகிற்கும் முழுமையான ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது” என்றார்.
‘ஹரித் யோகா’ முயற்சி பற்றி பேசுகையில், “நமது ஆரோக்கியம் நமது புவிக்கோளின் ஆரோக்கியத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. யோகா நமது மனதையும் உடலையும் வளர்ப்பது போல, மரம் நடுதல் பூமியை வளர்க்கிறது, வருங்கால சந்ததியினருக்கு பசுமையான, ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்கிறது” என்றார்.
யோகாவின் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அம்சம் பற்றி குறிப்பிட்ட மத்திய இணை அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடியின் ‘தாயின் பெயரில் ஒரு மரக்கன்று’ என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஹரித் யோகாவை இணைத்து, “இந்த முயற்சி தனிநபர்கள் மற்றும் புவி ஆரோக்கியத்தை வளர்ப்பதற்கான அடையாளச் செயலாக மரங்களை நடுவதை ஊக்குவிக்கிறது” என்று கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா