சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் கொண்டு வரும்போது மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

இப்போது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டதால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்து மக்கள் மீது பொருளாதார சுமை ஏற்படும்.

அதாவது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டிருப்பதால் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும்  உயர வாய்ப்புண்டு. இதன் மூலம் சாமானிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். 

குறிப்பாக கலால் வரி உயர்த்தப்பட்டாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இருக்காது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் மத்திய அரசு உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியையும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வையும் திரும்ப பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply