போர்ச்சுகலின் லிஸ்பன் நகரில் நேற்று (ஏப்ரல் 7, 2025) நடைபெற்ற விழாவில், லிஸ்பன் மேயரிடமிருந்து லிஸ்பன் நகரத்தின் உயரிய விருதான ‘சிட்டி கீ ஆஃப் ஹானர்’ விருது குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இந்த விருதை தமக்கு வழங்கிய லிஸ்பன் நகர மேயருக்கு நன்றி தெரிவித்தார். லிஸ்பன் நகரம் அதன் பரந்த மனப்பான்மை, சிறந்த மக்கள், வளமான கலாச்சாரம், பன்முகத்தன்மை போன்றவற்றிற்காக பெயர் பெற்றுள்ளது என்று அவர் கூறினார். தொழில்நுட்ப மாற்றம், புதுமை, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, டிஜிட்டல் மாற்றம் ஆகியவற்றில் முன்னணியில் உள்ள உலகளாவிய நகரமாக லிஸ்பன் திகழ்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்தத் துறைகளில் இந்தியாவும் போர்ச்சுகலும் மேலும் ஒத்துழைப்புடன் செயல்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் குடியரசுத் தலைவர் கூறினார்.
நேற்று மாலை (ஏப்ரல் 7, 2025),பலாசியோ டா அஜுடாவில் போர்ச்சுகல் அதிபர் திரு மார்செலோ ரெபெலோ டி சூசா ஏற்பாடு செய்த விருந்திலும் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்.
விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், நமது மக்களுக்கு இடையேயான கலாச்சார உறவுகள் பல நூற்றாண்டுகள் பழமையானவை என்று கூறினார். இந்தியா-போர்ச்சுகல் இடையேயான இருதரப்பு உறவுகளின் 50-வது ஆண்டைக் கொண்டாடும் நிலையில் இந்த ஆண்டு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது எனறு குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு குறிப்பிட்டார்.
திவாஹர்