பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், துபாய் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்-உடன் 2025 ஏப்ரல் 08 அன்று புதுதில்லியில் உள்ள சவுத் பிளாக்கில் சந்தித்துப் பேசினார். நிறுவன வழிமுறைகள், ராணுவப் பயிற்சிகள், பயிற்சித் திட்டங்கள் பரிமாற்றம் போன்றவற்றின் மூலம் தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற இதரத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்பதை இரு அமைச்சர்களும் ஒப்புக் கொண்டனர். பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக பயிற்சி பரிமாற்றங்களை அவர்கள் அடையாளம் கண்டனர். இது பரஸ்பரம் பாதுகாப்பு சூழல் அமைப்புகளைப் புரிந்துகொள்வதற்கும் இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதை விரைவுபடுத்துவதற்கும் உதவும்.
கடலோரக் காவல்படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்து திருப்தி தெரிவித்த இரு தலைவர்களும், புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் முறைப்படுத்தி அதை மேலும் வலுப்படுத்த உறுதி பூண்டனர். பாதுகாப்புத் தொழில்களுக்கு இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பானதூ இருதரப்புக்கும் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். பாதுகாப்புத் தொழில் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள், பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதித்தனர்.
கண்காட்சிகள் மற்றும் பாதுகாப்பு பொருட்காட்சிகளில் இரு தரப்பினரும் தீவிரமாகப் பங்கேற்பதை இரு அமைச்சர்களும் ஒப்புக் கொண்டனர். இந்தியா-ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு கூட்டாண்மை மன்றத்தை அவர்கள் வரவேற்றனர். இந்தியாவில் உற்பத்தி செய்வோம் மற்றும் மேக் இன் அமீரகம் திட்டங்களில் இரு நாடுகளுக்கும் இடையே கவனம் செலுத்தவும் அவர்கள் இசைவு தெரிவித்தனர்.
கூட்டத்திற்குப் பிறகு சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் ஐக்கிய அரபு அமீரகத்துடனான விரிவான உத்திசார் கூட்டாண்மை இந்தியாவுக்கு மகத்தான முன்னுரிமை அளிக்கிறது என்று கூறியுள்ளார். வரும் ஆண்டுகளில், பாதுகாப்பு ஒத்துழைப்பு, இணை உற்பத்தி மற்றும் கூட்டு மேம்பாட்டு திட்டங்கள், கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் நெருக்கமாக பணியாற்ற நாங்கள் ஆர்வமாக உள்ளோம். பிராந்தியத்தில் அமைதி மற்றும் முன்னேற்றத்தை நோக்கி செயல்பட இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் உறுதிபூண்டுள்ளன என்று கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்துடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் 2003-ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டது. மேலும் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2017-ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டது. இரு நாடுகளும் பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளின் அடிப்படையில் வலுவான நட்புறவைக் கொண்டுள்ளன.
திவாஹர்