நானே பாமக தலைவர்! -மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பு!

நானே பாமகவின் தலைவராக இருப்பேன் என்றும், தற்போது தலைவராக இருக்கும் மருத்துவர் அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார் என்றும், மருத்துவர் ராமதாஸ் இன்று அறிவித்துள்ளார்.

மேலும், கட்சியின் எல்லா விவரங்களையும் வெளிப்படையாக இங்கு இப்போது தெரிவிக்க இயலாது என்றும் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ராமதாஸின் இந்த அறிவிப்பு பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவர் ராமதாஸுக்கு என்ன ஆயிற்று? ஏன் அடிக்கடி இதுப் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்?

மருத்துவர் ராமதாசுக்கும், அவரது மகன் மருத்துவர் அன்புமணிக்கும் அடிக்கடி இது போன்ற மோதல்களும்; முரண்பாடுகளும் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றும், இதை பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், இது காலப்போக்கில் சரியாகிவிடும் என்றும் பாமக தலைமைக்கு நெருக்கமான நபர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

மருத்துவர் ராமதாஸின் இத்தகைய அறிவிப்பு பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் அன்புமணி தலைமையில்தான் பாமக தொடர்ந்து செயல்பட வேண்டும்; தேர்தலையும் சந்திக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

மருத்துவர் ராமதாஸா? மருத்துவர் அன்பு மணியா? யார் பேச்சை நாங்கள் கேட்பது?! என்ற குழப்பத்தில் முக்கிய நிர்வாகிகள் சிக்கித் தவித்து வருகிறார்கள்.

மருத்துவர் ராமதாஸ் தனது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கும், தன் விருப்பப்படிதான் பாமகவில் எல்லாம் நடக்க வேண்டும் என்றும் பிடிவாதமாக இருந்தால் காலப் போக்கில் கட்சி காணாமல் போய்விடும்.

தான் உருவாக்கிய கட்சி, தன் காலத்திலேயே, தன் கண் முன்னே சிதறுண்டுப் போவதை மருத்துவர் ராமதாஸ் கடுகளவும் விரும்ப மாட்டார்.

எனவே மருத்துவர் ராமதாஸ் இன்று எடுத்து இருக்கும் இந்த முடிவை கட்சி மற்றும் தொண்டர்களின் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக அவரது முதுமை மற்றும் உடல் ஆரோக்கியம் கருதியாவது இந்த முடிவை உடனே மாற்றிக் கொள்ள வேண்டும்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரையாவது மருத்துவர் அன்புமணி பாமகவின் தலைவராக நீடிக்க அவகாசம் அளிக்க வேண்டும். அவரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.

மருத்துவர் அன்புமணியின் தேர்தல் வியூகம் மற்றும் அவரது செயல்பாடு இத்தேர்தலில் பயனளிக்கவில்லை என்றால் அதன் பிறகு மருத்துவர் ராமதாஸ் தனது முடிவில் உறுதியாக இருப்பதில் எந்த தவறும் இல்லை.

பொறுத்திருந்துப் பார்ப்போம்.

Leave a Reply