சைபர், விண்வெளி மற்றும் தகவல் போர் போன்றவை வழக்கமான நடவடிக்கைகளைப் போலவே சக்திவாய்ந்ததாக இருக்கும் இன்றைய பன்முகச் சூழலில் ஆயுதப்படைகள் கூட்டாக செயல்படுவதுடன், எதிர்காலத்திற்குத் தயாராகவும் இருக்க வேண்டும்” என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் படை பணியாளர் கல்லூரியின் (டி.எஸ்.எஸ்.சி) 80- வது பட்டமளிப்பு விழாவில் இன்று இந்தியா மற்றும் நட்பு நாடுகளின் ஆயுதப்படை அதிகாரிகளிடையே அவர் உரையாற்றினார்.
இன்றைய உலகளாவிய புவிசார் அரசியல் மூன்று முக்கிய அளவீடுகளால் மறுவரையறை செய்யப்படுகிறது என்று பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார்: தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கிய ஒரு முக்கிய அச்சாணி, உலகளாவிய நிலப்பரப்பை உலுக்கும் தொழில்நுட்ப சுனாமி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளை துரிதப்படுத்துதல். இந்தப் போக்குகளின் நுணுக்கங்களை ஆழமாக ஆய்வு செய்து, பாதுகாப்பு – ராணுவ மாற்றத்தின் வளைகோட்டில் முன்னேற வேண்டும் என்று அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஆயுதப் படைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போருக்கு தயார் நிலையில் உள்ள படையாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் தடுப்பு மற்றும் போர் நடவடிக்கைகளில் முக்கியமான வழிகளில் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன என்று குறிப்பிட்ட திரு ராஜ்நாத் சிங், போர் அரங்குகளில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் சக்தி பிரமிக்க வைக்கிறது என்றார். “உக்ரைன்-ரஷ்யா மோதலில், ட்ரோன்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அறிவியலாக இல்லாவிட்டாலும்கூட கிட்டத்தட்ட ஒரு புதிய ஆயுதமாகவே உருவெடுத்துள்ளன. வீரர்கள் மற்றும் உபகரணங்களின் பெரும்பாலான இழப்புகள் பாரம்பரிய பீரங்கிகளோ அல்லது கவசங்களோ ஏற்பட்டவை அல்ல, மாறாக ட்ரோன்களால் ஏற்பட்டவை. இதேபோல், குறைந்த பூமி சுற்றுப்பாதையில் உள்ள இட கொள்ளளவு ராணுவ உளவுத்துறை, தொடர்ச்சியான கண்காணிப்பு, நிலைநிறுத்தல், இலக்கு மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றை மாற்றி வருகின்றன, இதனால் போரை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்கின்றன, “என்று அவர் கூறினார்.
உலகம் சாம்பல் மண்டலம் மற்றும் கலப்பின போர் யுகத்தில் உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார், அங்கு சைபர் தாக்குதல்கள், தவறான தகவல் பிரச்சாரங்கள் மற்றும் பொருளாதாரப் போர் ஆகியவை ஒரு தோட்டா கூட சுடப்படாமல் அரசியல்-ராணுவ நோக்கங்களை அடையக்கூடிய கருவிகளாக மாறியுள்ளன. இந்தியா அதன் எல்லைகளில் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது, இது அதன் அண்டை நாடுகளிலிருந்து வெளிப்படும் மறைமுகப் போர் மற்றும் பயங்கரவாதத்தின் சவாலால் மேலும் சிக்கலாகிறது என்று அவர் கூறினார்.
இயற்கைப் பேரழிவுகள் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற பாரம்பரியம் அல்லாத பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு கூடுதலாக , ஒட்டுமொத்த பாதுகாப்பு கணக்கீட்டில் மேற்கு ஆசியாவில் மோதல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் புவிசார் அரசியல் பதற்றங்களின் தாக்கம் குறித்தும் திரு ராஜ்நாத் சிங் பேசினார். எதிர்கால போர்களுக்கு திறன் மற்றும் பொருத்தமானதாக இருக்க ஆயுதப்படைகளின் மாற்றத்தை தீவிரமாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார், 2047 ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த பிரதமர் மோடியின் பார்வை இரண்டு அடிப்படை தூண்களில் உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.
தற்சார்பு மூலம் ஆயுதப் படைகளின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலை பாதுகாப்புத்துறை அமைச்சர் வலியுறுத்தினார். “தற்போதைய மோதல்களின் படிப்பினைகள் ஒரு நெகிழக்கூடிய, உள்நாட்டு மற்றும் எதிர்காலத்திற்கு தயாராக உள்ள பாதுகாப்பு தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது ஒரு விருப்பமல்ல, ஆனால் ஒரு அவசியமான தேவை என்பதை நமக்குக் கற்பிக்கின்றன. குறைந்த செலவிலான உயர் தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்கி, ஆயுதப்படைகளின் போரிடும் திறனை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. நமது படைகள் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப செயல்படுவது மட்டுமல்லாமல், அதை வழிநடத்தவும் வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து கூறுகளுக்கும் இடையே மேம்பட்ட ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்றும் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். உலகின் தெற்குப் பகுதிக்கான ‘மகாசாகர்’ (பிராந்தியங்களுக்கிடையேயான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்) என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை பற்றி பாதுகாப்புத் துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்கால சவால்களை சமாளிக்க விழிப்புணர்வு, திறன், தகவமைப்பு, சுறுசுறுப்பு, தூதர்கள் ஆகிய ஐந்து அம்சங்களில் கவனம் செலுத்துமாறு திரு ராஜ்நாத் சிங் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். “போர் வீரர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பின் பாதுகாவலர்கள் என்ற வகையில், நீங்கள் சுற்றுச்சூழல் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். எதிர்காலத் தலைவர்களுக்கு தேவையான திறமையையும் நீங்கள் பெற வேண்டும். தகவமைப்பு மற்றும் சுறுசுறுப்பை முக்கிய நற்பண்புகளாக நீங்கள் உள்வாங்க வேண்டும். நாளைய போர்க்களத்தில் எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கக்கூடிய, தொழில்நுட்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, புதுமையான தீர்வுகளைக் கொண்டு வரக்கூடிய தலைவர்கள் தேவை. நீங்கள் உங்கள் ராணுவத்தின் தூதர்களாக ஆக வேண்டும். மாற்றத்தின் தூதராகவும், சமூகத்தின் மத்தியில் சரியான முன்மாதிரியாகவும் இருங்கள்” என்று அவர் வலியுறுத்தினார்.
“நெருக்கடி காலங்களில் முதலில் நிற்கும் நாடாக இந்தியா எப்போதும் தனது நண்பர்களுடன் நிற்கிறது, மியான்மர் மக்களுக்கு சரியான நேரத்தில் நிவாரணம் வழங்குவதை எங்கள் கடமையாக நாங்கள் கருதுகிறோம்” என்று அவர் கூறினார்.
80-வது பணியாளர் பயிற்சி வகுப்பில் 26 நட்பு நாடுகளைச் சேர்ந்த 38 பணியாளர்கள் உட்பட மொத்தம் 479 மாணவ அதிகாரிகள் உள்ளனர். இந்த பயிற்சியில் 3 பெண் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
விழாவிற்கு முன்னதாக, திரு ராஜ்நாத் சிங் மெட்ராஸ் ரெஜிமென்ட் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னாள் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பை அங்கீகரித்தார். இந்த நிகழ்ச்சியில் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
1948 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட டி.எஸ்.எஸ்.சி ஒரு முதன்மையான முப்படை பயிற்சி நிறுவனமாகும், இது இந்திய ஆயுதப்படைகள் மற்றும் நட்பு நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுத்தர அளவிலான அதிகாரிகளுக்கு தொழில்முறைக் கல்வியை வழங்குகிறது. உயர் பொறுப்புகளை ஏற்பதற்கான அவர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக, 19,000-க்கும் மேற்பட்ட இந்திய அதிகாரிகள் மற்றும் 2,000 சர்வதேச அதிகாரிகள் டி.எஸ்.எஸ்.சி.யில் பட்டம் பெற்றுள்ளனர், அவர்களில் பலர் உலகெங்கிலும் உள்ள அரசுகள் மற்றும் ராணுவப் படைகளின் தலைவர்களாக உயர்ந்துள்ளனர்.
திவாஹர்