தனது சொல்லாலும், செயலாலும் கடமைகள் தவறியதாலும் தொடர்ந்து அவமானத்தை சந்தித்து வரும் அமைச்சர் பொன்முடி, தனது ஆபாச பேச்சாலும், ஆணவ பேச்சாலும் திமுக கட்சிக்கும், ஆட்சிக்கும், வெகுஜன மக்களுக்கும் அவர் தொடர்ந்து களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார். இப்படிப்பட்ட வாய் கொழுப்பு எடுத்த ஒரு நபர் தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக பல ஆண்டுகள் பதவி வகித்தார் என்பதும், ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவர் இன்றும் தமிழ்நாட்டின் வனத்துறை அமைச்சராக பதவியில் இருந்து வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட ஒரு நபரை இன்னும் காப்பாற்ற நினைப்பதும், தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்க அனுமதித்திருப்பதும் ஏன் என்பதுதான் நாட்டு மக்களின் மிகப்பெரிய கேள்வியாக இன்று இருந்து வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடியை திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். விடுவிப்பதற்கான உண்மையான காரணம் என்ன என்பதை கூட அந்த அறிவிப்பில் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.
திமுகவின் மூத்த நிர்வாகி என்பதாலும், ஒரு காலத்தில் கட்சிக்கும், தலைமைக்கும் மிகவும் விசுவாசமாக இருந்தார் என்பதாலும் அவர் செய்யும் அனைத்து சட்டவிரோத செயல்களையும் நியாயப்படுத்த முடியாது.
மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு ஆபாசமாக பேசுவதும், ஆணவமாக பேசுவதும், சாதி மதத்தை குறிப்பிட்டு இழிவாக பேசுவதும் பொன்முடிக்கு இது ஒன்றும் முதல் முறை அல்ல! பல நிகழ்வுகளை இங்கு சொல்ல முடியும்.
இவரை பலமுறை திமுக தலைமை கடுமையாக எச்சரித்தும் கூட இவர் இன்று வரை திருந்தியதாக தெரியவில்லை.
எனவே பொன்முடியின் தொடர் நடவடிக்கை அவர் வகித்து வரும் அமைச்சர் பதவிக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இனி ஒரு நிமிடம் கூட இவர் அமைச்சராக நீடிப்பதில் அர்த்தமில்லை. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தனது நேர்மையை நிரூபிக்க வேண்டிய தருணம் இப்போது வந்துவிட்டது. ஆம், பொன் முடியை அவர் வகித்து வரும் அமைச்சர் பதவியில் இருந்து உடனே விடுவித்து அமைச்சரவையின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும்.
நாவடக்கம் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு; ஒன்று வாய்க்கு வந்ததையெல்லாம் பேசாமல் இருப்பது! மற்றொன்று கண்டவற்றையெல்லாம் உண்ணாமல் இருப்பது. வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசினால் பழிச் சொல்லுக்கு ஆளாகி பொதுவெளியில் அவமானப்பட வேண்டி வரும்.
கட்டுப்பாடு இல்லாமல் கண்டவற்றையெல்லாம் சாப்பிட்டால் உடல் வீணாகிவிடும். அதனால்தான் யாராக இருந்தாலும் நாவடக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும். இது எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். இதற்கு அமைச்சர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?
-Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,