உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ரூ. 3880 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைத்தார். திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய அவர் காசியுடன் தமது ஆழமான தொடர்பை எடுத்துரைத்தார். தமக்கு ஆசி வழங்கியதற்காக அவர் தமது குடும்பத்தினருக்கும் இந்த பிராந்திய மக்களுக்கும்
மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். தமக்கு வழங்கிய ஆதரவையும், தம் மீதான அன்பையும் அவர் அங்கீகரித்தார். இந்த அன்புக்கு தாம் கடன்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், காசி தமக்குள் இருப்பதாகவும், காசியைச் சார்ந்து தாம் இருப்பதாகவும் கூறினார். நாளை அனுமன் ஜென்மோத்சவம் என்ற புனிதநாள் என்று குறிப்பிட்ட திரு மோடி, காசியில் உள்ள சங்கட் மோச்சன் மகராஜிக்கு பயணம் செய்யும் வாய்ப்பை பெற்றது தமக்கு கிடைத்த கௌரவம் என்றார். அனுமன் ஜென்மோத்சவம் நடைபெறவுள்ள நிலையில், வளர்ச்சியின் திருவிழாவைக் கொண்டாட மக்கள் பெருமளவு ஒன்று திரண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த பத்து ஆண்டுகளில் வாரணாசியின் வளர்ச்சி புதிய உத்வேகத்தை பெற்றுள்ளது என்று கூறிய பிரதமர், காசி நவீனத்தை தழுவிக் கொண்டுள்ளது. அதன் பாரம்பரியத்தைப் பாதுகாக்கிறது, ஒளிமயமான எதிர்காலத்தை பெறவிருக்கிறது என்றார். காசி வெகு காலத்திற்கு வெறுமனே தொன்மையானதாக மட்டுமே இருக்காது என்று கூறிய அவர், முன்னேற்றமடைந்ததாகவும் இருக்கும் என்றார். தற்போது இது பூர்வாஞ்சலின் பொருளாதார வரைபடத்தில் மையநிலையில் உள்ளது என்று அவர் கூறினார். பகவான் மகாதேவ் மூலம் வழிகாட்டப்படும் காசி, தற்போது பூர்வாஞ்சலின் வளர்ச்சி ரதத்தை செலுத்துகிறது என்று கூறினார்.
காசி, மற்றும் பூர்வாஞ்சலின் பல்வேறு பகுதிகளுடன் தொடர்புடைய பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது பற்றியும், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பது பற்றியும், குறிப்பிட்ட திரு மோடி, உள்கட்டமைப்பு திட்டங்கள் மூலம் போக்குவரத்து இணைப்பை வலுப்டுத்துவது, அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்கான இயக்கம், கல்வி, சுகாதார விரிவாக்கம், விளையாட்டு வசதிகள் போன்றவற்றையும் எடுத்துரைத்தார். அனைத்து பகுதிகளுக்கும், குடும்பங்களுக்கும், இளைஞர்களுக்கும் சிறந்த வசதிகளை வழங்குவதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது என்று கூறிய பிரதமர், இந்த முன் முயற்சிகள் பூர்வாஞ்சலை வளர்ச்சியடைந்த பகுதியாக மாற்றுவதில் மைல் கல்லாக அமையும் என்று கூறினார். இந்தத் திட்டங்கள் மூலம் காசியில் உள்ள அனைத்து குடியிருப்புவாசிகளுக்கும் பலன் கிடைக்கும் என்று குறிப்பிட்ட அவர், இந்த வளர்ச்சியின் முயற்சிகளுக்காக பனாரஸ் மற்றும் பூர்வாஞ்சல் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மகாத்மா ஜோதிபா பூலேயின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவது பற்றி கூறிய பிரதமர், அவரும், சாவித்ரிபாய் பூலேயும் சமூக நலனுக்கும், பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கும் தங்களின் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்றார். அவர்களின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகளை எடுத்துரைத்த அவர், பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் உறுதிபூண்டிருப்பதாகவும் தெரிவித்தார். தமது அரசு, அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற மந்திரத்தை பின்பற்றுவதாக கூறிய அவர், பூர்வாஞ்சலின் கால்நடை வளர்ப்பு குடும்பங்கள் குறிப்பாக கைவினைத் தொழில் செய்யும் பெண்கள் இந்தப் பிராந்தியத்தில் ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்தப் பெண்களிடம் நம்பிக்கை வைத்துள்ள இந்தப் பகுதி வரலாற்றை உருவாக்குகிறது என்றார். உத்தரப்பிரதேசத்தின் பனாரஸ் பால்பண்ணை திட்டத்துடன் இணைந்துள்ள கால்நடை வளர்ப்போர் குடும்பங்களுக்கு போனஸ் வழங்கப்படுவதை யும் அவர் சுட்டிக்காட்டினார். ரூ.100 கோடிக்கும் அதிகமான இந்த போனஸ் அன்பளிப்பல்ல, மாறாக அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கான பரிசாகும் என்று தெரிவித்த பிரதமர், அவர்களின் உழைப்பையும், விடா முயற்சியையும் இது பிரதிபலிக்கிறது என்றார்.
காசியில் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் செல்வாக்கையும், வாழ்க்கை நிலையையும் பனாரஸ் பால்பண்ணை மாற்றியமைத்துள்ளது என்று உறுதிபட தெரிவித்த திரு மோடி, இந்த பால்பண்ணை வாழ்க்கையை எவ்வாறு மறுவடிவமைப்பு செய்து அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றியுள்ளது என்பதையும் எடுத்துரைத்தார். இந்த முயற்சிகள் பூர்வாஞ்சலில் ஏராளமான பெண்களை லட்சாதிபதி சகோதரிகளாக மாற்றியுள்ளது என்று பெருமையுடன் குறிப்பிட்ட அவர், வாழ்க்கை நடத்துவதில் சிரமங்கள் என்பதை மாற்றி வளத்திற்கான பாதையை ஏற்படுத்தித் தந்துள்ளன என்றார். இந்த முன்னேற்றம் பனாரசிலும், உத்தரப் பிரதேசத்திலும் மட்டுமின்றி நாடு முழுவதும் இருப்பதாக அவர் கூறினார். உலக அளவில் பால் உற்பத்தியில் மிகப்பெரிய நாடாக இருக்கும் இந்தியா, கடந்த பத்தாண்டுகளில் பால் உற்பத்தி அளவு சுமார் 65 சதவீதம் அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்டார். இந்த வெற்றிக்கு லட்சக்கணக்கான விவசாயிகளும், கால்நடை உரிமையாளர்களும் காரணமாகும் என்பதை எடுத்துரைத்த அவர், இந்த சாதனைகள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகளின் பயன் என்று கூறினார். கால்நடை உரிமையாளர்களை விவசாயக் கடன் அட்டை திட்டத்துடன் இணைத்தல், கடன் வரம்பை அதிகரித்தல், மானிய திட்டங்களை அறிமுகம் செய்தல் உட்பட பால்பண்ணை துறையை இயக்க கதியில் இந்த முன்முயற்சிகள் முன்னேற்றுவதை அவர் சுட்டிக்காட்டினார். கால்நடைகளைப் பராமரிக்க கோமாரி நோய்களுக்கு எதிரான இலவச தடுப்பூசி திட்டம் பற்றியும் குறிப்பிட்ட பிரதமர், ஒருங்கிணைக்கப்பட்ட பால் சேகரிப்புக்காக 20 ஆயிரத்திற்கும் அதிகமான கூட்டுறவு சங்கங்களை புனரமைக்கும் முயற்சிகள், புதிய உறுப்பினர்களை இணைத்தல் ஆகியவை பற்றியும் எடுத்துரைத்தார். தேசிய கோகுல் இயக்கத்தின் கீழ் அறிவியல் பூர்வமான இனப்பெருக்கத்தின் மூலம், உள்நாட்டு கால்நடைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த முன் முயற்சிகள், கால்நடை உரிமையாளர்களை வளர்ச்சிப் பாதையில், சிறந்த சந்தையில், வாய்ப்புகளில் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார். பனாரஸ் பால்பண்ணையானது பூர்வாஞ்சலில் உள்ள சுமார் ஒரு லட்சம் விவசாயிகளிடமிருந்து பால் சேகரிப்பதை பாராட்டிய அவர், இது அவர்களுக்கு அதிகாரமளிப்பதோடு, அவர்களின் வாழ்வாதாரங்களைப் பலப்படுத்துவதாகக் கூறினார்.
பல மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் வாய வந்தனா அட்டைகள் வழங்கும் வாய்ப்பு தமக்கான பேறு என்று பிரதமர் குறிப்பிட்டார். அவர்களின் முகங்களில் திருப்தி உணர்வு வெளிப்படுவதாக எடுத்துரைத்த அவர், இந்தத் திட்டத்தின் வெற்றிக்கான அடையாளம் இது என்று குறிப்பிட்டார். பூர்வாஞ்சல் பகுதியில் 10-11 ஆண்டுகளுக்கு முன் மருத்துவ சிகிச்சை தொடர்பாக மூத்த குடிமக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை நினைவுகூர்ந்த அவர், இந்தப் பகுதியில் தற்போது பெருவாரியான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், காசி தற்போது சிறந்த ஆரோக்கியத்தின் தலைநகராக மாறிவருகிறது என்றும் கூறினார். மருத்துவமனைகள் அதிகரித்திருப்பது பற்றிக் கூறிய பிரதமர், ஒரு காலத்தில் தில்லி, மும்பை என்று மட்டுமே இருந்த மருத்துவமனை வசதிகள் தற்போது மக்களின் வீடுகளுக்கு அருகிலேயே கிடைக்கின்றன என்றார். இது தான் வளர்ச்சியின் சாராம்சமாகும். அதாவது மக்களுக்கு நெருக்கமாக வசதிகளை கொண்டு வருவது என்று பிரதமர் தெரிவித்தார்.
கடந்த பத்தாண்டுகளில் சுகாதாரப் பராமரிப்பில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் என்பவை மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் நின்று விடாமல், நோயாளிகளின் கண்ணியத்தை மேம்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்ட திரு மோடி, ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏழைகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும், இது சிகிச்சையை அளிப்பதுடன் நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார். வாரணாசியில் ஆயிரக்கணக்கானோரும், உத்தரப்பிரதேசம் முழுவதும் லட்சக்கணக்கானோரும் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர் என்றும், ஒவ்வொரு சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் நிவாரணம் அவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும் குறிப்பிட்டார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் கோடிக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளது என்றும், அவர்களின் சுகாதாரப் பராமரிப்புக்கு அரசே பொறுப்பேற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்ற தமது வாக்குறுதியை நினைவுகூர்ந்த பிரதமர், இதன் பொருட்டு ஆயுஷ்மான் வயவந்தனா திட்டம் தொடங்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டினார். 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வருமானத்தைப் பொருட்படுத்தாமல், இலவச சிகிச்சையை இந்த முயற்சி உறுதி செய்கிறது என்று குறிப்பிட்டார். வாரணாசி மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 50,000 அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது வெறும் புள்ளிவிவரம் அல்ல, சேவைக்கான அர்ப்பணிப்பு என்றும் அவர் கூறினார். குடும்பங்கள் நிலத்தை விற்கவோ, கடன் வாங்கவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு உதவியற்ற நிலையை எதிர்கொள்ளவோ வேண்டிய அவசியத்தை இது நீக்குகிறது. ஆயுஷ்மான் அட்டை மூலம், அவர்களின் சுகாதாரத்திற்கான நிதிப் பொறுப்பை அரசு ஏற்கிறது என்று அவர் தெரிவித்தார்.
எஸ்.சதிஸ் சர்மா