இத்தாலி – இந்தியா இடையே இருதரப்பு அறிவியல் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் தற்போது இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அந்நாட்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சித் துறை அமைச்சர் திருமதி அன்னா மரியா பெர்னினி, மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. குவாண்டம் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, உயிரித் தொழில்நுட்பம் மற்றும் இதர வளர்ந்து வரும் துறைகளில் கூட்டு முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து இவ்விரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.
பிரேசிலில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் திருமதி ஜார்ஜியா மெலோனி இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதை அப்போது டாக்டர் ஜிதேந்திர சிங் நினைவு கூர்ந்தார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் கூட்டு கண்டுபிடிப்புக்கான திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இவ்விரு நாடுகளும் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் இணைந்து செயல்படுவதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற முக்கியத் தொழில்நுட்பங்களில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 2025-2027 நிர்வாக திட்டத்தை செயல்படுத்தவும் இவ்விரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.
இந்த சந்திப்பின் போது உயிரித் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எம்.பிரபாகரன்