ஒடிசாவின் பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், கோபபந்து மக்கள் ஆரோக்கிய திட்டம் ஆகியவற்றின் அட்டைகளை மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா மற்றும் ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜியும் இன்று கட்டாக்கில் வழங்கினர். இந்த நிகழ்வில் ஆயுஷ்மான் வயவந்தனா திட்டத்தையும் அவர்கள் தொடங்கிவைத்தனர். மத்திய பழங்குடியினர் நல அமைச்சர் திரு ஜூவல் ஓரம், ஒடிசா மாநில சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் திரு முகேஷ் மகாலிங்க், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் தற்போது 62 கோடிபேர் பயனடைந்து வருவதாகவும், இவர்களில் ஒடிசாவில் 1.3 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 3.52 கோடி பேர் பயனடைவதாகவும் நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு கே பி நட்டா தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டம் காரணமாக மருத்துவத்திற்காக மக்கள் தங்கள் சொந்த பணத்திலிருந்து செலவு செய்வது தற்போது 62 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்காக நாடு முழுவதும் 100 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட தீவிர காச நோய் ஒழிப்பு இயக்கத்தின் போது ஒடிசாவில் 16,500 பேர் புதிதாக காசநோய் பாதிப்புக்கு உள்ளாக்கியிருப்பது கண்டறியப்பட்டது என்று அமைச்சர் குறிப்பிட்டார். ஒடிசாவில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் ரூ.1411 கோடி வழங்கப்பட்டுள்ளதாக திரு ஜே பி நட்டா தெரிவித்தார்.
எஸ்.சதிஸ் சர்மா