ஃபரிதாபாதில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு நிறுவன மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையின் 2-வது பட்டமளிப்பு விழா டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்றது.

புதுதில்லியில் உள்ள பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் அரங்கில் இன்று நடைபெற்ற ஃபரிதாபாத் தொழிலாளர் ஈட்டுறுதிக் காப்பீட்டு நிறுவன மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் 2-வது பட்டமளிப்பு விழா மத்திய தொழிலாளர்  மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா  தலைமையில் நடைபெற்றது.  இந்த விழாவில் 2016, 2017, 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கும் 47 முதுநிலை மருத்துவப் படிப்பு முடித்த முதல் தொகுப்பில் உள்ள தலா 100 மாணவர்கள் உட்பட மொத்தம் 447 மாணவர்கள்  பட்டம் பெற்றனர்.

இவ்விழாவில் உரையாற்றிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, நாட்டின் வளர்ச்சியில் சுகாதார வல்லுநர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பட்டதாரி மாணவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடனும், நெறிமுறைகளைப் பின்பற்றியும் சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்குடனும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தலைசிறந்த குடிமகனாக இருப்பதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்திற்கு  அடித்தளம் அமைக்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.  ஃபிட் இந்தியா இயக்கத்தின் வழிகாட்டிகளாக மருத்துவர்கள் திகழ்கின்றனர் என்றும், மக்களிடையே சுகாதாரம், நோய்த்தடுப்பு, பராமரிப்பு மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதில்  மருத்துவர்கள் முக்கிய பங்காற்றி வருகிறார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த அமைச்சர் புத்தகங்கள்  வழிகாட்டிகளாகத் திகழ்கின்றன என்றும் உண்மையான வெகுமதி என்பது அவர்கள் படைக்கும் சாதனையில்தான்  உள்ளது என்றும் கூறினார்.

புதிய மருத்துவர்கள் கிராமப்புறங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் பணியாற்ற முன்வர வேண்டும் என்றும்  கள யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளவும், சுகாதாரப் பராமரிப்பு எளிதில் அணுகக்கூடியதாகவும், குறைந்த செலவிலும் இருப்பதை உறுதி செய்யவும் வேண்டும் என்பதையும் திரு மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார்.

Leave a Reply