குடியரசுத் தலைவரை இத்தாலி துணைப் பிரதமர் சந்தித்தார்.

இத்தாலி துணைப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான  திரு. அந்தோனியோ தஜானி இன்று (ஏப்ரல் 12, 2025) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த துணைப் பிரதமர் தஜானி மற்றும் அவரது குழுவினரை வரவேற்ற குடியரசுத் தலைவர், இந்தியாவும் இத்தாலியும் பண்டைய நாகரீக பாரம்பரியத்தில் வேரூன்றியவை என்றும், நமது தத்துவம், இலக்கியம் மற்றும் கலைகள் மூலம் உலகிற்கு பங்களிப்பு செய்த பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டவை என்றும் குறிப்பிட்டார். பல நூற்றாண்டுகளாக வர்த்தகம், மக்கள் மற்றும் கருத்துக்களின் பரிமாற்றம் மூலம் நாம் ஒன்றோடொன்று இணைந்துள்ளோம். தற்போதைய சகாப்தத்தில், இரு நாடுகளும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றில் நெருக்கமாக ஒத்துழைத்து வருகின்றன என்றும்,  ஜி-20 போன்ற பன்னாட்டு மேடைகளில் இணைந்து பணியாற்றி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதற்கான பெரும் வாய்ப்புகள் உள்ளதாக குடியரசு தலைவர் தெரிவித்தார். இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான செயல்திட்டம் ஆகியவை தொழில்துறை கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்புக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகின்றன. குறிப்பாக உற்பத்தி மற்றும் இணை உற்பத்திக்காக இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துமாறு இத்தாலிய நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். இத்தாலிய பசுமை தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்திய தொழில்துறையுடன் ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைக்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2024 நவம்பரில் ரியோவில் பிரதமர் மெலோனி, பிரதமர் மோடி ஆகியோர் நடத்திய சந்திப்பின் போது அறிவிக்கப்பட்ட கூட்டு  செயல் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கானது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்தச் செயல் திட்டம் நமது கூட்டு முயற்சிகளை துரிதப்படுத்த வழிகாட்டும் கட்டமைப்பாக இருக்கும்.

இத்தாலிய பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சி மையங்களும் இந்திய கூட்டு நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கை வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் திறக்க வழிவகுத்துள்ளது என்று அவர் கூறினார். இந்தியாவில் வளாகங்களைத் திறக்க இத்தாலிய பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பு விடுக்கலாம் என்று அவர் கூறினார்.

இந்தியா-இத்தாலி இடையேயான உத்திசார் கூட்டாண்மை வரும் காலங்களில் புதிய உச்சத்தை எட்டும் என்பதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

Leave a Reply