ஜெர்மன் மாநிலமான பவேரியாவின் தலைமை அமைச்சர் (முதலமைச்சர் – Minister – President) திரு மார்கஸ் சோடர், மத்திய அறிவியல் – தொழில்நுட்பம், விண்வெளி துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்துப் பேசினார்.
உயர்நிலை ஜெர்மன் தூதுக்குழுவினரை வரவேற்ற இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங், அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு ஆகியவற்றில் இந்திய-ஜெர்மன் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள், உயிரி தொழில்நுட்பம், தூய்மையான எரிசக்தி, மின்சார வாகனப் போக்குவரத்து, பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட முன்னுரிமை துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை அவர் சுட்டிக் காட்டினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் இந்தியா விரைவான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கியுள்ளது என அவர் தெரிவித்தார். அறிவியல், தொழில்நுட்பத் தலையீடுகள் நிலையான தீர்வுகளை தேடும் இந்தியாவின் முயற்சியில் ஜெர்மனி ஒரு இயற்கையான கூட்டு செயல்பாட்டு நாடாக உள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
உயரித் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அவர் எடுத்துரைத்தார். 3000-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்களுடன் ஒரு உயிரித் தொழில் நுட்ப மையமாக இந்தியா உருவெடுத்துள்ளதை அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பம், அணுசக்தி துறைகள் தற்போது தனியாருக்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதால், இவற்றில் மிகப்பெரிய ஒத்துழைப்பு வாய்ப்புகள் உள்ளன என்று திரு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் டாக்டர் பிலிப் ஆக்கர்மேன், அந்நாட்டின் பிற மூத்த பிரதிநிதிகள் ஜெர்மன் தரப்பில் கலந்து கொண்டனர். இந்திய தரப்பில், அறிவியல், தொழில்நுட்பத் துறையின் செயலாளர் டாக்டர் அபய் கரண்டிகர் உள்ளிட்டோர் விவாதங்களில் பங்கேற்றனர்.
எம்.பிரபாகரன்