கூட்டுப் போர் ஆய்வுகள் மையம் புதுதில்லியில் பாதுகாப்பு இலக்கியத் திருவிழா ‘கலாம் & கவாச் 2.0’ ஐ நடத்தியது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள் தலைமையகத்தின் ஆதரவின் கீழ் இயங்கும் கூட்டுப் போர் ஆய்வுகள் மையமானது பென்டகன் பிரஸ் உடன் இணைந்து, புது தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் ‘கலாம் & கவாச் 2.0’ பாதுகாப்பு இலக்கிய விழாவின் இரண்டாவது பதிப்பை வெற்றிகரமாக நடத்தியது.

இன்று (2025 ஏப்ரல் 15) நடைபெற்ற இந்த நிகழ்வில், பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் எதிர்காலப் போர்முறை, குறிப்பாக பாதுகாப்புத் தளவாட உற்பத்தி குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இது ‘தற்சார்பு இந்தியா’-க்கான பிரதமரின் அழைப்புக்கு ஏற்ப கொள்முதல் சீர்திருத்தங்களின் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தது.

நாட்டின் பாதுகாப்பைப் பாதிக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க ஆயுதப்படைகளின் புகழ்பெற்ற நிபுணர்கள், திட்டமிடல், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் துறை வல்லுநர்கள் ஆகியோரை இந்த நிகழ்வு ஒன்றிணைத்தது. தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால போர் உள்ளிட்ட பல தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது. நவீன ராணுவ நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவு, சைபர் தொழில்நுட்பங்கள், குவாண்டம் கம்ப்யூட்டிங், ட்ரோன்கள், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் குறைக்கடத்திகளின் பங்கு; பாதுகாப்புத் தளவாட உற்பத்தி மற்றும் தற்சார்பு இந்தியா, கையகப்படுத்தல் மற்றும் கொள்முதல் சீர்திருத்தங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Leave a Reply