தமிழக அரசு, அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 20.07.2024 சனிக்கிழமை அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் ஏற்கனவே இரண்டு முறை மின் கட்டணத்தை உயர்த்தியதால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இப்போது 3 ஆவது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் சாதாரண மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.
தமிழக அரசு, மின் கட்டண உயர்வை ஜூலை 1 முதல் அமல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
மின் கட்டணம் உயர்ந்தால் தொழில் நலிவடையும், அனைத்து தரப்பு மக்களுக்குமான விலைவாசி உயரும்.
எனவே தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி 20.07.2024 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் த.மா.கா வின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், துணை அமைப்பினர் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.
தமிழக அரசின் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின் கட்டண உயர்வுக்கான அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழக மக்கள் நலன் காக்கும் விதமாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பொது மக்களும் கலந்து கொண்டு ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்